யாழ் பல்கலைகழக கல்விசாரா ஊழியர்கள் பணி வெற்றிடத்திற்கான நேர்முகத் தேர்விற்கான பெயர்ப்பட்டியலில் அரசியல் கலந்திருப்பதாக விண்ணப்பதாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கோரப்பட்ட விண்ணத்திற்கு முறைப்படி விண்ணப்பித்த தம்மை பெயர்ப்பட்டியலில் இணைக்கவில்லையென தெரிவித்து பல நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
யாழ் பல்கலைகழக கல்விசார ஊழியர்கள் பதவிவெற்றிடத்தை நிரப்புவதற்காக, உயர்கல்வி அமைச்சு கோரிய விண்ணப்பத்திற்கமைவாக யாழில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்திருந்தனர். தற்போது நேர்முகத் தேர்விற்குரியவர்களின் பெயர் விபரங்கள் யாழ் பல்கலைகழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியல் பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. உள்ளூரில் விண்ணப்பித்தவர்கள் இதில் அதிகமாக இணைத்துக் கொள்ளப்படாமல், வெளிமாவட்டங்களை சேர்ந்த- அனேக, முஸ்லிம்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
உயர்கல்வி அமைச்சராக பதவியிலிருந்த ரவூப் ஹக்கீமின் அரசியல் நியமனங்கள் இவையென தெரிகிறது.
இதற்கு உள்ளூர் விண்ணப்பதாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த அரசியல் நியமனங்கள் நிறுத்தப்பட வேண்டுமென நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பில், யாழ் பல்கலைகழக சங்கத்தினரை சந்தித்து தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முறையிட்டுள்ளனர்.
இந்த நியமனங்கள் அரசியல்ரீதியானவை, இன்று ஆரம்பிக்கும் நேர்முகத் தேர்வில் உள்ளூர் விண்ணப்பதாரிகளிற்கு நியமனம் வழங்குவதை பல்கலைகழக நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டுமென, வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தமிழ்பக்கத்திடம் வலியுறுத்தினார்.
இதேவேளை, யாழ் பல்கலைகழக தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் கந்தசாமி, இந்த அரசியல்ரீதியான நியமனத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தற்போது தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள அவர், துணைவேந்தர் பதவியை எதிர்நோக்கி உயர்கல்வி அமைச்சிற்கு ஒத்தாசையாக செயற்படுகிறாரா என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.