படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று வெளிவிவகார அமைச்சர் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் அமைச்சின் செயலாளர், இராணுவத்தின் வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, பொலிஸ் அதிகாரிகள், விமானப்படை அதிகாரிகள், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், வவுனியாவின் நான்கு பிரதேச செயலாளர்கள், வன வளத்திணைக்கள அதிகாரிகள் மற்றும் வட மாகாண காணி ஆணையாளர் உட்பட நில அளவைத்திணைக்கள அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
இந் நிலையில் வவுனியாவில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அதோடு செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் அருவித்தோட்டத்தில் இராணுவம் கையப்படுத்தியுள்ள 123 ஏக்கர் காணியை விடுவிப்பது தொடர்பில் கரிசனை எடுக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதன்போது வனவளத்திணைக்களத்திடம் இராணுவத்தினரின் பாவனைக்காக மாற்றுக்காணிகளை கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சரோ ஏனைய அதிகாரிகளோ கருத்துக்கூற மறுத்துவிட்டதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.