யாழ்.மாநகர சபை எல்லைக்குள் சபை அனுமதி இன்றி தன்னிச்சையாக Smart Lamp Poles பொருத்தும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிமாட் பொலுடன் இணைக்கப்படும் கண்காணிப்பு கமெரா மற்றும் தொலைத்தொடர்பு அன்ரனா போன்றவை பொருத்தப்படுவதற்கான காரணம் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பம் சார் விடயங்கள் மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் இன்று காலை யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் வ.பார்த்தீபன், இ.ரஜீப் ஆகியோர் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தியபோதே அவர்கள் குறித்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
மேலும், யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சபை அனுமதி இல்லாமல் 18 Smart Lamp Poles பொருத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவற்றை பொருத்துவது தொடர்பில் மாநகர சபையுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் எதிர்காலத்தில் குறித்த சிமாட் பொலில் சிறிய ரக தெலைத்தொடர்பு அன்ரனா பொருத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் கண்காணிப்பு கமெராக்களும் பொருத்தப்படவுள்ளன.
இது தொடர்பில் தொழில்நுட்ப அறிக்கை மற்றும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் தகவல்களை தருமாறு சபை முதல்வரிடம் கோரியிருந்ததோடு இவ்விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட பொது கூட்டம் கூட்டவும் சட்ட ரீதியாக கோரிக்கை விடுத்திருந்தோம்.
ஆனால் இதுவரையில் முதல்வரிடம் இருந்த எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சிமாட் பொல் பொருத்தும் வேலைத்திட்டம் மிக மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
அத்துடன் எமது பிரதேசத்தில் இடம்பெறும் எந்த அபிவிருத்திக்கும் நாங்கள் தடையில்லை . கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தும் நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கின்றோம். மாநகரத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் அந்த கமெராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
ஆனால் தற்போது சபை அனுமதி இல்லாமல் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பொருத்தப்படும் சிமாட் பொல்லில் இணைக்கப்படும் கமொராக்கள் மக்களுடைய இயல்பு வாழ்க்கையை பாதிப்பவையாக அமையும் என்றும் எனவே சிமாட் போல் தொடர்பில் உரிய முறையில் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.