ஈரான் கடற்படையால் சுடப்பட்ட அமெரிக்க உளவு விமானத்தின் பாகங்களை ஈரான் தொலைக்காட்சி புகைப்படங்களாக வெளியிட்டுள்ளது.
ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாகவும், அமெரிக்கா தங்களது பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் ஈரான் குற்றம் சாட்டியது.
ஈரான் மிகப்பெரிய தவறை இழைத்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். எனினும், இது மனிதத் தவறுகளால் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறிய ஜனாதிபதி, ஈரான் வேண்டுமென்றே செய்திருக்கும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் ஈரானால் சுடப்பட்ட அமெரிக்க உளவு விமான பாகங்களின் புகைப்படங்களை அந்நாட்டின் தேசியத் தொலைக்காட்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியாக குற்றம் சாட்டும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் மீது இராணுவத் தாக்குதல் மேற்கொள்வதற்கு உத்தரவிட்டதாகவும், பின்பு உடனடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.