இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கிண்ண போட்டியில் அதிர்ச்சி வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு சூத்ரதாரியாக விளங்கியவர் லசித் மலிங்க. இவர் பேர்ஸ்டோ, வின்ஸ், ரூட், பட்லர் ஆகிய இங்கிலாந்து துடுப்பாட்டத்தின் முதுகெலும்பை உடைக்க இங்கிலாந்து படுதோல்வியைச் சந்தித்தது.
10 ஓவர் 1 மெய்டன் 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய லசித் மலிங்க உலகக்கிண்ண சாதனையில் மெக்ராத், முரளிதரன், வாசிம் அக்ரம் ஆகியோருடன் சாதனைப் பட்டியலில்இணைந்தார்.
உலகக்கிண்ணப் போட்டிகளில் 50 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அவுஸ்திரேலிய வேகப்பந்து மேதை கிளென் மெக்ராத் 39 போட்டிகளில் 71 விக்கெட்டுகளுடன் முதலிடம் வகிக்கிறார். முரளிதரன் 40 போட்டிகளில் 68 விக்கெட்டுகள், வாசிம் அக்ரம் 38 போட்டிகளில் 55 விக்கெட்டுகள், அடுத்த இடத்தில் மலிங்க 26 போட்டிகளில் 51 விக்கெட்டுகள் என்று 4 இடங்களில் சாதனையாளர்களுடன் இணைந்தார் மலிங்க.
5வது இடத்தில் 49 விக்கெட்டுகளுடன் இலங்கையின் மற்றொரு பந்துவீச்சாளர் சமிந்த வாஸ் உள்ளார். ஆகவே உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதில் முதல் 5 இடங்களில் 3 இடங்கள் இலங்கை பந்துவீச்சாளர்களுக்குரியது.
இந்தியாவின் ஜாகீர் கான், ஸ்ரீநாத் 44 விக்கெட்டுகளுடன் 6 மற்றும் 7ம் இடங்களில் உள்ளனர்.
கடைசியாக இங்கிலாந்து அணி உலகக்கிண்ணத்தில் இலங்கையை வீழ்த்தியது 1999ல்தான் அதன் பிறகு 2007ல் 2 ரன்களிலும் 2011ல் கொழும்பில் 10 விக்கெட்டுகளிலும், 2015ல் வெலிங்டனில் 9 விக்கெட்டுகளிலும், 2019ல் 20 ரன்களிலும் இங்கிலாந்து இலங்கையிடம் தோல்வி தழுவியது குறிப்பிடத்தக்கது.
உலகக்கிண்ணத்துக்கு முன்னதாக படுதோல்விகளை ஒருநாள் போட்டிகளில் சந்தித்து வந்த இரு அணிகளிடம் இந்த உலகக்கிண்ணத்தில் இங்கிலாந்து தோல்வி தழுவியது. ஒன்று பாகிஸ்தான். இந்த அணி 11 ஒருநாள் போட்டிகளில் தோல்விகளுடன் இங்கிலாந்தைச் சந்தித்து வெற்றி கண்டது. அதே போல் இலங்கையிடம் நேற்று தோல்வி தழுவியது.