பண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பலவந்தமாக வீட்டிற்குள் புகுந்த கும்பல் ஒன்று, குறித்த முஸ்லிம் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக சித்திரவதை செய்துள்ளனர். வீட்டில் இருந்த பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தி அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் பண்டாரகம பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய சந்தேக நபர்கள் 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை நீதிபதி நேற்று உத்தரவிட்டுள்ளார்.
தனக்கு ஷரிஆ சட்டத்தின் கீழ் சித்திரவதை செய்து, ஆடைகளை கிழித்து மக்கள் கூடியிருந்த வீதியில் இழுத்து சென்றதாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண் தெரிவித்துள்ளார்.
சிங்கள நபரை திருமணம் செய்தமையினால் தனக்கு பிரதேச முஸ்லிம் மக்களால் தொடர்ந்தும் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகவும், இது தொடர்பில் கடந்த மார்ச் மாதம் முதல் பல முறை முறைப்பாடு செய்ததாக அந்த பெண் குறிப்பிட்டார்.
எப்படியிருப்பினும் இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தனியார் தொலைகாட்சி ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் இந்த சம்பவத்தை நாட்டிற்கு வெளிப்படுத்தியுள்ளார்.
அதற்கமைய நேற்று முன்தினம் குறித்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.