அபிவிருத்தி பணிகளை சுட்டிக்காட்டி அதிகளவான விமர்சனங்களை வெளியிடுவதால் மலையகத்தின் மூத்த தொழிற்சங்கம் ஒன்றுக்கு அவப் பெயர் ஏற்படும் வகையில் கோப் குழுவுக்கு பல முறைபாடுகள் சென்றுள்ளது.
ஒருவரின் சேவையை விமர்சிக்கும் முன் தனது முதுகை சொறிந்துக் கொண்ட பின் அடுத்தவரின் முதுகையை சொறிய செல்ல வேண்டும்.
அதிகம் பேசுவதை விட அதிகமாக பெற்றுக்கொள்வதை கருத்திற் கொண்டால் நல்லது என மூத்த தொழிற்சங்கம் ஒன்றின் உறுப்பினர் ஒருவரை விமர்சித்து அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாண கொட்டகலை யதன்சைட் தமிழ் மகா வித்தியாலயத்தின் இரண்டு மாடி வகுப்பறை கட்டிடம் நேற்று (22) மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணனால் திறந்து வைக்கப்பட்டது.
இதற்காக கல்வி அமைச்சின் மூலமாக கட்டிடத்திற்காக 8.5 மில்லியன் ரூபாவும் தளபாடங்களுக்காக 15 இலட்சமும் செலவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வுகள் அனைத்தும் பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. இதன் போது நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டம் 3ற்கான கோட்ட கல்வி பணிப்பாளர் வடிவேல், மலையக மக்கள் முன்னணியின் நிதி செயலாளர் புஸ்பா விஷ்வநாதன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மயில்வாகனம் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த காலங்களில் இராஜாங்க கல்வி அமைச்சராக இருந்த என்னை அவர் என்ன செய்து விட்டார் என மூத்த தொழிற்சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் விமர்சித்துள்ளார். முதலில் அவர் என்ன செய்து இருக்கின்றார் என்பதை அவர் உணர வேண்டும் என தெரிவித்த அவர்,
இராஜாங்க கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் இந்த நாட்டில் நூற்றுக்கு எழுபது வீத பாடசாலைகளை திறந்து வைத்தது எனது தலைமையில் தான் என்பதை உணர்த்திக் கொள்ளும் அதேவேளை, மத்திய மாகாணத்தில் ஆசிரியர்கள் நியமனம் கல்வித்துறைசார் அதிகாரிகளின் நியமனம் என பல்வேறு வேலைத்திட்டங்களை நான் மேற்கொண்டுள்ளமையை எவராலும் மறுக்க முடியாது.
ஒரு காலத்தில் சிறிய இடம் ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் தின விழா போட்டிகளை தேசிய தமிழ் தின விழா போட்டியாக நாட்டு ஜனாதிபதிகளின் ஊடாக முன்னெடுத்தது நானே. இன்று அனைத்து தமிழ் தின விழா போட்டிகளும், தேசிய மட்டத்திலான போட்டிகளாகவே இடம்பெறுகிறது.
ஒருவர் செய்யும் அபிவிருத்தியில் பாராட்டுக்கள் எமக்கு வேண்டாம். அதே நேரத்தில் விமர்சிப்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். செய்யும் சேவைகளும், முன்னெடுக்கும் அபிவிருத்திகளையும் மக்கள் நலன் கருதியே முன்னெடுக்கப்படுகின்றது.
அதை விமர்சினத்திற்கு உள்ளாக்குவதால் இன்று மலையகத்தின் மூத்த அரசியல் தொழிற்சங்கம் ஒன்றுக்கு கெட்ட பெயர்கள் இவ்வாறான நபர்களின் ஊடாக ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் அவ்வாறான அரசியல் தொழிற்சங்கம் ஒன்றுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் பாராளுமன்ற கோப் குழுவில் பல்வேறு முறைபாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வாயை அடக்கிக்கொண்டு விமர்சனத்தை தவிர்த்துக் கொண்டு செயல்பட்டு இருந்தால் இந்த அவப்பெயர் வந்து சேர்ந்திருக்காது. குறைவாக பேசி கூடுதலாக பெற்றுக்கொள்வனை உணர்ந்து செயல்பட அவ்வாறானவர்களுக்கு அறிவுத்துகின்றேன்.
அதேவேளை இப்படியானவர்களை மூத்த கட்சியில் வைத்துக் கொள்வது தொடர்பில் அக்கட்சியின் தலைவர் கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.