நபி முஹம்மது (ஸல்) அவர்களிடம் குறைஷிகள் உலக ஆசையைத் தூண்டிப் பார்த்தனர். நபிகளார் அசரவில்லை. பிறகு பயமுறுத்தினர். நபிகளார் அஞ்சவில்லை. நபிகளாரிடம் பேரம்பேசினர், அதிலும் குறைஷிகளுக்குத் தோல்வி. நபி முஹம்மது (ஸல்) சொன்னதெல்லாம் “உங்கள் விருப்பத்திற்காகத் திருக்குர்ஆனின் வசனங்களை மாற்றிவிட எனக்கு எவ்வித சக்தியுமில்லை. இறைவசனங்கள் மூலம் எனக்கு அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறொன்றையும் நான் பின்பற்றுவதற்கில்லை. என்னுடைய இறைவனுக்கு நான் மாறுசெய்தால் நான் வேதனைக்கு ஆளாக வேண்டிவரும், நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று திருக்குர்ஆனின் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
“அல்லாஹ் அறிவித்ததை விடுத்து நான் வேறு ஏதாவது இட்டுக்கட்டியிருந்தால், என்னை நீங்கள் உற்ற நண்பராக்கிக் கொண்டிருப்பீர்கள். நான் உறுதியாளனாக இல்லாமல் உங்கள் பக்கம் சாய்ந்திருந்தால் இந்த வாழ்வில் மட்டுமல்ல, இறந்த பிறகு மறுமையிலும் இரு மடங்கு வேதனையை நான் சுவைத்திருக்க வேண்டி வரும்” என்று திருமறையிலுள்ள வசனங்களையும் குறைஷிகளுக்கு ஓதிக்காட்டினார்கள் நபி முஹம்மது (ஸல்).
ஆத்திரமடைந்த குறைஷிகள் தங்களில் ஒருவரை யூத அறிஞர்களிடம் அனுப்பி நபி (ஸல்) பற்றியும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் பற்றியும் விசாரித்து வரச் செய்தனர். யூத அறிஞர்கள் சில கேள்விகளுக்குப் பதிலை முஹம்மது (ஸல்) சரியாகச் சொல்லிவிட்டால் அவர் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் என்றனர். அதன்படியே நபிகளாரிடம் கேள்விகள் தொடுக்கப்பட்டன.
அத்தியாயம் ‘கஹ்ஃப்’ அருளப்பட்டு, அதிலிருந்து அவர்களுக்கான பதிலை நபிகளார் சிறப்பாகத் தந்தார்கள். குறைஷிகளுக்கு உண்மை விளங்கிவிட்டது, நபிகள் முஹம்மது (ஸல்) கொண்டுவந்தது சத்தியமான மார்க்கம் என்றும் நபிகளார் உண்மையாளர் என்பது பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொண்டனர், ஆனாலும் இறைமறுப்பாளர்கள் நபிகளாரை ஏற்க மறுத்தனர்.
குறைஷிகளின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக நபிகளாரின் குடும்பத்தினரை அதாவது இஸ்லாமை ஏற்றவர்கள் ஏற்காதவர்கள் என்றில்லாமல் ஒட்டுமொத்தமாக ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையினரை ஒதுக்கி வைத்தனர். கொடுக்கல் வாங்கலோ, திருமண உறவோ எவ்வித தொடர்பும் அவர்களுடன் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் தீர்மானித்தனர். இதனால் ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையினர் பல இன்னல்களுக்குள்ளாகினர். அவர்களின் வெறுப்பும் சாபமும் குறைஷிகளைப் பாதிக்குமென்று குறைஷிகளில் பெரும்பாலோர் நம்பியதால் அப்படியான உடன்படிக்கையிலிருந்து விடுபட்டனர். ஆனால் இப்படியான இன்னல்களால் மிகவும் தளர்ந்து வலுவிழுந்தார் அபூதாலிப்.
தனது சகோதரனின் மகனான முஹம்மது (ஸல்) அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் தனது எண்பது வயதைக் கடந்தும் உறுதியாக இருந்தார்கள். இறை மறுப்பாளர்கள் அபூதாலிபின் மரணத்திற்குப் பிறகு முஹம்மது (ஸல்) அவர்களைத் தாக்கினால் அவர்களுக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டு விடுமென்று அஞ்சி அபூதாலிப் உயிருடன் இருக்கும்போதே அவருடன் பேச்சுவார்த்தை நடத்தலாமென்று வந்தனர்.
“அபூதாலிபே! உங்களது சகோதரனின் மகனை அழைத்து அவரிடமிருந்து எங்களுக்குச் சில வாக்குறுதிகளை வாங்கிக் கொடுங்கள்” என்று கோரிக்கை வைத்தனர். அபூதாலிபும் நபிகளாரை வரவழைத்து வாக்குறுதியை கேட்க முற்பட்டபோது நபி முஹம்மது (ஸல்) “குறைஷிகள் நான் கேட்கும் ஒரே ஒரு சொல்லை சொல்லிவிட்டால் அவர்கள் அரபியர்களையும் அரபி அல்லாதவர்களையும் ஆட்சி செய்யலாம். எல்லோருமே இவர்களுக்குப் பணிந்து நடப்பார்கள்” என்று கேட்க, எல்லோரும் ஒப்புக் கொண்டு “அது என்ன சொல்?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் “லா இலாஹா இல்லல்லாஹ், வழிபாட்டிற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. நீங்கள் வணங்கும் அனைத்தையும் விட்டு விலகிவிட வேண்டும்” என்றார்கள். உடனே குறைஷிகள் மறுப்பு தெரிவித்தனர். ‘கடவுள்களையெல்லாம் ஒரே கடவுளாக்குவதை அவர்கள் விரும்பவில்லையென்றும் அதில் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஏதோ சுயநலம் உள்ளதென்றும்’ கூறி வெளியேறிவிட்டனர்.
அப்போதுதான் அத்தியாயம் ‘ஸாத்’தின் இறைவசனங்கள் அருளப்பட்டன.
(திருக்குர்ஆன் 10:15, 17:73-75, 38:1-8 சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)
-ஜெஸிலா பானு.