திருட்டு குற்றச்சாட்டு, ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறுவர்கள் உட்பட 6 பேரை கனடாவின் டொராண்டோ பொலிசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் இரண்டு தமிழ் வாலிபர்களும் உள்ளடங்குகிறார்கள்.
குயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் ஒசிங்ன்டன் அவென்யூ பகுதியில் கடந்த திங்கட்கிழமை (17) இரவு 9 மணியளவில் ஆயுதங்களை காட்டி இவர்கள் திருட்டில் ஈடுபட்டிருந்தனர்.
23 வயதான ஒரு பெண் தனது மடிக்கணினியை விற்க Kijiji விற்பனை இணையத்தளத்தில் விளம்பரத்தை செய்திருந்தார். அதனை வாங்குவதாக ஆணொருவர் தொடர்பு கொண்டுள்ளார். இருவரும் சந்தித்து விற்பனையை முடிக்க, சம்பவ இடத்தில் இரு தரப்பும் சந்திப்பதாக முடிவாகியது.
குறிப்பிட்ட இடத்தில் மடிக்கணினியுடன் பெண் காத்திருந்தபோது, இரண்டு ஆண்கள் வந்து மடிக்கணினியை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். அவர்கள் தப்பி ஓடும்போது, ஆண் ஒருவரின் இடுப்பில் இருந்து ஒரு கைத்துப்பாக்கி விழுந்தது. பின்னர் அவர்கள் திருடப்பட்ட வெள்ளி நிற ஹொண்டா சிவிக் கார் ஒன்றில் தப்பியோடியுள்ளனர்.
மறுநாள் (18) திருடர்களின் ஒருவன் பெண்ணின் மடிக்கணினியை ஒன்லைனில் விற்க முயன்றுள்ளான். பெண் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விற்பனை இணையங்களை கண்காணித்துக் கொண்டிருந்த பொலிசார், அந்த கணினியை வாங்குவதை போல தொடர்பு கொண்டு சந்திப்பை ஒழுங்கு செய்தனர்.
இதன்படி குறிப்பிட்ட ஒரு இடத்தில் இரு தரப்பும் சந்தித்தபோது, மடிக்கணினி இளைஞனை பொலிசார் மடக்கிப்பிடித்தனர். மடிக்கணினி, ஒரு பெரிய வேட்டை கத்தி, கிரெடிட் கார்ட் போன்ற கத்தி மற்றும் மினி க்ளோக் ஏயார் கைத்துப்பாக்கி ஆகியவற்றுடனே அவன் அங்கு வந்திருந்தான்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் குழுவாக செயற்பட்டது தெரிய வந்தது. அதையடுத்து, அந்த குழுவில் இயங்கியவர்கள் வரிசையாக கைது செய்யப்பட்டனர். மொத்தம் ஐஆறு பேர் கைதாகினர். இதில் இரு சிறுவர்கள் உள்ளடங்குகிறார். இருவர் தமிழ் இளைஞர்கள்.
அவர்களால் திருடப்பட்ட காரும் மீட்கப்பட்டது.
டொராண்டோவைச் சேர்ந்த தாஜியன் அலெக்சாண்டர் ஸ்மித் (Tajean Alexander Smith), மட்சுஷன் கமலகுமரன் (Matchushan Kamalakumaran) மற்றும் மொஹ்சென் யஹ்யா (Mohsen Yahya), லக்ஷ்சன் லக்ஷ்மிகாந்தன் (Laxsen Laxmikanthan) ஆகியோரை பொலிசார் அடையாளம் கண்டு கைதுசெய்துள்ளனர். இவர்கள் அனைவரும் 18 வயதானவர்கள். சிறுவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், 17 வயதான சிறுவன் ஒருவனே அதிக குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதாக ரொரன்ரோ பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் அனைவரும் ஜூலை 31ம் திகதி காலை 10 மணிக்கு 111ம் இலக்க அறையல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.