அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் போக்கினால் வளைகுடாப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்த்துள்ளது.
கடந்த புதன்கிழமை அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்ததை தொடர்ந்து ஈரான் மிகப்பெரிய தவற்றை செய்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
அதற்குப் பதிலடியாக ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்த அவர் உத்தரவிட்டதாகவும் பின்னர் உடனடியாக அதைத் திரும்பப் பெற்றதாகவும் தகவல்கல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தங்கள் நாட்டு வான் எல்லைக்குள் நுழைந்து உளவு பார்த்ததன் காரணமாகவே அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறியது. அதனை மறுத்த அமெரிக்கா தங்களது ஆளில்லா விமானம் சர்வதேச எல்லைப் பகுதியில்தான் பறந்துகொண்டிருந்ததாகவும் அது வெறும் கண்காணிப்புப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுவது எனவும் கூறியது.
அமெரிக்காவிற்கு எதற்கு இந்த விமானங்கள்?
அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இது மாதிரியான கண்காணிப்பு விமானங்கள் அவசியம் தேவைப்படும் ஒன்றாக இருக்கின்றன.
அதாவது தாம் தாக்கப்படுவோம் எனும் அபாயம் இருக்கும் பகுதியில் எதிரிகளைக் கண்காணிப்பது அவசியமானதாக இருக்கிறது. முன்பு போர் விமானங்களில் சென்று எதிரிகளின் நிலப்பரப்பைக் கண்காணித்து வந்தார்கள். இப்போது எதிரிகளிடமும் கண்காணிப்புக்காகக் கூடுதலான வழிகள் அதிகமாகவே இருக்கின்றன. ஆனால், ஒரு வேளை போர் விமானம் எதிரிகளிடம் சிக்கிவிட்டால் உயிரிழப்புகள் நேரலாம். அவற்றையெல்லாம் தவிர்க்க உருவாக்கப்பட்டதுதான் இந்த ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள்.
அந்தவகையில் தற்போது சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத்தின் பெயர் RQ-4 Global Hawk. இதனை Northrop Grumman என்ற நிறுவனம் அமெரிக்க ராணுவத்துக்கு இதைத் தயாரித்து வழங்கிவருகிறது. இது தவிர கடல்பரப்புகளைக் கண்காணிப்பதற்காக MQ-4C ட்ரைடன் என்ற ஆளில்லா விமானத்தையும் அமெரிக்கா பயன்படுத்திவருகிறது.
கண்காணிப்பு விமானங்கள் அதிக நேரம் வானில் பறக்க வேண்டியிருக்கும். எனவே, அதற்குத் தகுந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குளோபல் ஹாக். ஒரு முறை முழுமையாக எரிபொருளை நிரப்பிவிட்டால் சுமார் 22,000 கிலோமீட்டர்கள் நிற்காமல் பறக்கும் திறன் கொண்டதுதான் இந்த விமானக்கள் .
ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சதுர கிலோமீட்டர்கள் அளவுக்கான நிலப்பரப்பைக் கண்காணிக்கும் திறன் இதற்கு உண்டு. இதன் கழுகுப்பார்வையிலிருந்து யாருமே தப்பமுடியாது. இது சுடப்பட்டவுடன் அமெரிக்கா கோபமடையக் காரணம் இதற்கான விலை அதிகம் என்பதுதான்.
ஒரு RQ-4 குளோபல் ஹாக் விமானத்தை உருவாக்க 120 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவாகிறது. 14,000 கிலோ கிராம் எடை கொண்ட இதன் இறக்கைகள் ஒவ்வொன்றும் 130 நீளமுடையவை. ஆளில்லா விமானம் என்பதால் இதனுள்ளே கருவிகளை வைக்க அதிகமான இடம் இருக்கிறது. அதற்கேற்ற வகையில் இதனுள்ளே கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதி நவீன ரேடார் தரையில் இருப்பவற்றைப் பற்றிய தகவல்களை அப்படியே கொண்டு வந்துவிடும்.
மேலும், அதிகதிறன் கொண்ட டெலிபோட்டோ கேமரா இருப்பதால் இலக்கை எளிதாகப் படம்பிடிக்கும் திறனும் இதற்கு உண்டு. இவ்வளவு சிறப்புக்கள் இருந்தாலும் இதனால் எதிரிகளைத் தாக்க முடியாது. இது உளவு பார்க்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எதிரிகளின் ரேடாரில் சிக்கக் கூடாது என்பதற்காக இது பெரும்பாலும் அதிக உயரத்தில் தான் பறக்கும்.
எனினும் இதனிடமிருந்து யாரும் தப்ப முடியாது என்றாலும், இதுவே ஈரானிடம் மாட்டிக்கொண்டதுதான் அமெரிக்காவிற்கு சோகம்!.