கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இரணைமடு அபிவிருத்தி திட்டம் தொடர்பில் வடமாகாண நீர்ப்பாசன திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்ற தெளிவூட்டல் கலந்துரையாடலையடுத்து இந்த விஜயம் இடம்பெற்றது.
இதன்போது அபிவிருத்தி பணிகளை பார்வையிட்ட எதிர்க்கட்சித் தலைவர், அதன் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கான நீர்வழங்களும் சுத்திகரிப்புக்குமான திட்டமான இரணைமடு அபிவிருத்தி திட்டம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
கிளிநொச்சியில் அமைந்துள்ள திட்ட முகாமைத்துவ அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது குறித்த திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் செலவீனங்கள் குறித்து பொறியியலாளர்கள் மற்றும் திட்டத்திற்கு பொறுப்பானவர்களால் எதிர்க்கட்சித் தலைவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதன்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், வடமாகாண சபை அமைச்சர் த.குருகுலராசா மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.