வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றுச் சக்தியாக உருவெடுத்துள்ள தமிழ் மக்கள் பேரவையானது, பிரிவினைவாத நிகழ்ச்சித் திட்டத்துடன் செயற்பட்டு வருவதாக தென்னிலங்கையிலுள்ள அரசியல் சக்திகள் குற்றம் சுமத்தி வருகின்ற இன்றைய சந்தர்ப்பத்தில், வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் கொழும்பில் இன்று பிற்பகல் ஊடகவியலாளர்களைச் சந்திக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணியானது தென்னிலங்கையில் ஏற்படுத்திய சந்தேகங்களையும் சலசலப்பையும் தணிக்கும் வகையிலேயே தமிழ் மக்கள் பேரவை தென்னிலங்கை ஊடகவியலாளர்களை இன்று சந்திக்கவிருப்பதாகத் தெரிகிறது.
எழுக தமிழ் பேரணியானது பிரிவினைக்கான வெளிப்பாடல்ல என்றும், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு எடுத்துக் கூறுவதே இதன் நோக்கமெனவும் தமிழ் மக்கள் பேரவையினர் கூறுகின்றனர்.
எனவே தமிழ் மக்கள் பேரவை இன்று அளிக்கின்ற விளக்கங்கள் தென்னிலங்கையின் சந்தேகங்களைத் தணிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வடக்கு, கிழக்குத் தமிழினத்தின் அரசியல் இப்போது இரண்டும் கெட்டான் நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
முன்னைய அரசின் இனவாத ரீதியான அடக்குமுறைகளாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குறுதிகளாலும் ஆட்சி மாற்றத்துக்கு ஆதரவளித்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படவில்லை.
அச்சமற்ற சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளமை உண்மையாக இருந்த போதிலும், யுத்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யக் கூடியதாக அம்மக்களுக்கு எதுவுமே இன்னும் வழங்கப்படவில்லை.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லையென்பது ஒருபுறமிருக்க அரசியல் தீர்வு, கைதிகள் விடுதலை போன்றனவெல்லாம் இன்னும் எட்டாத தூரத்திலேயே உள்ளன.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரு வருடங்களாகி விட்ட போதிலும் இன்னுமே நீடிக்கின்ற ஏமாற்றங்கள் காரணமாக தமிழ் மக்கள் மத்தியில் அவநம்பிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் இன்றைய அரசாங்கத்தின் மீது மட்டுமன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும் சலிப்புக் கொள்ளும்படியாக அரசின் செயற்பாடுகள் இழுபறி நிலைமையில் சென்று கொண்டிருக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக வடக்கில் தமிழ் மக்கள் பேரவை உருவானமைக்கு இவ்வாறான சலிப்பையும் ஒரு காரணமாகக் கூற முடியும்.
வெறும் வாக்குறுதிகளை நம்பியபடி எத்தனை காலத்துக்கு தமிழினம் அரசியல் அநாதையாக வாழ முடியும்?
இவ்வாறான மனநிலை மாற்றத்தின் விளைவாகவே தமிழ் மக்கள் பேரவையின் தோற்றத்தை நாம் கருத முடியும்.
கடந்த வருடம் நடைபெற்ற பொதுத் தேர்தல் களநிலைவரத்துடன் ஒப்பிட்டு நோக்குகையில், தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமானது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுத் தளத்தை கொஞ்சமாவது ஆட்டம் காண வைத்திருக்கின்றது என்றுதான் கருத வேண்டியுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘எழுக தமிழ்’ பேரணியில் பங்கேற்ற மக்களின் தொகையை இதற்கான ஆதாரமாகக் கூற முடியும்.
‘எழுக தமிழ்’ பேரணியானது இவ்வாறான எழுச்சியொன்றைக் காண்பித்த போதிலும் தென்னிலங்கை அரசியல் சக்திகளோ அல்லது சாதாரண சிங்கள மக்களோ அப்பேரணியை சாதாரண நிகழ்வாகக் கருதவேயில்லை.
‘எழுக தமிழ்’ பேரணியானது சிங்கள சமூகத்தை மிரள வைத்துள்ளதென்பதே உண்மை.
‘எழுக தமிழ்’ பேரணியின் நாயகன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தான் என்பதில் எதுவித ஒழிவு மறைவுக்கும் இடமில்லை.
‘எழுக தமிழ்’ பேரணியானது தமிழ் மக்களின் சுயமான போராட்டமென்று தமிழ் மக்கள் பேரவை கூறிக் கொண்ட போதிலும், தென்னிலங்கை சமூகம் அக்கூற்றை நம்பி விடவில்லை.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் பிரிவினைக்கான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் செயற்படத் தொடங்கியிருப்பதாகவும், அந்த எழுச்சியின் வெளிப்பாடே ‘எழுக தமிழ்’ பேரணியென்றுமே சிங்கள மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
விக்னேஸ்வரனை இன்னும் கூட இன ஐக்கியத்துக்கான அடையாளமாக சிங்கள மக்கள் நினைப்பதற்கு தயாராக இல்லையென்பது தான் முக்கியமான விடயம்.
இவ்வாறான சர்ச்சைகளின் தொடர்ச்சியாகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் தென்னிலங்கை ஊடகவியலாளர்களை இன்று நேரில் சந்தித்து ‘எழுக தமிழ்’ தொடர்பான விளக்கத்தை அளிக்கப் போகின்றார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணியானது உண்மையிலேயே பிரிவினைக்கான போராட்டம் அல்லவென்பது அரசியல்வாதிகளுக்குப் புரியாததல்ல.
முப்பது வருட கால யுத்தத்தினால் சிதைந்து போன பூமியில் வாழும் மக்களின் மறுவாழ்வுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தியே அப்பேரணி நடைபெற்றதென்பது வெளிப்படையானது.
எனினும் தமிழ் மக்களின் ஆதங்கங்களை தென்னிலங்கைக்குப் புரிய வைப்பதென்பது இலகுவான காரியமல்ல. ஆனால் இவ்வாறான புரிதல் மிகவும் அவசியமானது.
விக்னேஸ்வரன் இப்போது எடுத்து வைத்திருக்கும் அடி காலத்தின் தேவை கருதியது.
எனினும் தமிழ் மக்களின் உணர்வுகளை பெரும்பான்மை சமூகம் புரிந்து கொள்ளுமா என்பதே பிரதானமான வினா!