கணவன்-மனைவி உறவு என்பது புரிதலின் அடிப்படையில் தான் முழுமை அடைகிறது. தனது துணையின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் பொழுதுதான் அந்த உறவு ஒரு சுவாரசியமான ஒன்றாக அமைகிறது. இது காதலன் காதலிக்கும் பொருந்தும். சில கடினமான தருணங்களில் ஒருவரை இன்னொருவர் புரிந்து கொள்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். இது போன்ற தருணங்களில் தான் உறவு முறிவு எனப்படும் பிரேக்கப் ஏற்படுகிறது.
அவ்வாறு புரிந்து கொள்ள தோன்றினாலும், உங்களுக்கு அவர் மீதுள்ள கோபம் நான் மட்டும் ஏன் புரிந்துகொண்டு இறங்கி வர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். இது உறவிற்கு ஆரோக்கியமானதல்ல. உங்களுடைய காதலி கோபமாக இருக்கும் பொழுது அவரை சமாதானப்படுத்த உங்களுக்கு வழி தெரியவில்லையா சின்ன சின்ன விஷயங்களை செய்தாலே போதும் கோபங்கள் மறைந்து வெடித்து சிரித்து உங்களிடம் வந்து சேர்வார் உங்களுடைய காதலி.
உங்களது மனைவி உங்கள் மீது கோபத்தில் இருக்கிறார் என்ன செய்தபோதும் இறங்கி வரவில்லை என்ற காரணத்திற்காக நீங்கள் மீண்டும் அவர் மீது கோபப்படக் கூடாது. அவரை சந்தோஷமாக வைத்துக்கொள்ள நீங்கள் அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் செய்த ஏதாவது ஒரு காரியத்தால் அவர் கோபம் கொண்டு இருக்கக்கூடும். அவருடைய மனநிலையை புரிந்து அவருடைய கோபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அதுவே, சமாதானத்திற்கு வழிவகை செய்யும்.
மேலும், பலர் செய்யும் முக்கிய தவறு கோபமாக இருப்பதைக் கண்டு கொள்ளாமல் வேறு விஷயங்களைப் பற்றி பேசுவது. அவரை உளவியல் ரீதியாக பாதிக்கும். உங்கள் உறவு அவ்வளவு மதிக்கப்படவில்லை என்ற எண்ணம் தோன்றும். எனது உணர்வுக்கு மதிப்பளிக்க வில்லை என்ற சுயபச்சாதாபம் தோன்றும் பொழுது, அதிகப்படியான கோபத்திற்கு வழிவகை செய்யும்.
எனவே உங்கள் இணை கோபமாக இருந்தால் அவரை பேச வையுங்கள். மனதிலிருப்பதை வெளிக்கொண்டு வந்தாலே ஓரளவு பிரச்சனைகள் தீர்வுக்கு வந்துவிடும். இதில் பாதி கோபங்கள் காணாமல் போயிருக்கும். இதைவிடுத்து அவரைப் போலவே, நீங்களும் கோபம் கொண்டு சண்டையிட்டால், அது மிகப்பெரிய விளைவுகளை தோற்றுவிக்கும். கோபம் வருவது அனைவருக்கும் இயல்புதான். ஆனால் உங்களது இணையின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கற்றுக்கொள்ளுங்கள் மாறாக எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளாதீர்கள்.
அவர் எதைக் குறித்து கோபம் அல்லது அச்சம் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து அதற்கு தீர்வு கூறுங்கள். ஏதாவது ஒரு காரணத்தினால் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இருக்கலாம். அல்லது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சில பிரச்சினைகளை அவரது மனநிலையை மாற்றி இருக்கலாம். இதற்கு முதல் தீர்வாக “நீ கோபம் கொண்டாலும், எனது காதலிதான். என்னுடன் பேசாமல் இருந்தாலும் எனது காதலி தான்” என அவரிடம் நேரடியாக கூறும் பொழுது உடனடியாக கிளீன் போல்ட் ஆகி விடுவார் உங்களது காதலி.
அடுத்ததாக உங்கள் காதலி நீங்கள் செய்த தமாஷுகளினால் முன்னதாகவே சமாதானமாகி இருக்கக்கூடும். ஆனால், அதை ஒப்புக்கொள்ள மனம் வராமல் கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு இருப்பார். அப்படி இருக்கும் பொழுது, சின்ன சின்ன காதல் லீலைகளை செய்து அவரை உங்கள் வலையில் விழ வைக்கலாம். அப்போது உங்கள் மூளைக்கு வேலை கொடுத்து யோசித்து அவரிடம் திட்டத்தை களம் இறக்குங்கள். அதாவது, “செல்லமே நான் ஒரு கதை படித்தேன். அதிகமாக காதல் கொண்டிருப்பவர் தான், அதிகமாக கோபம் கொள்வாராம். என் மீது இவ்வளவு கோபம் வைத்திருக்கும் நீ, எவ்வளவு காதலை வைத்திருப்பாய்? அதை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கின்றது” எனக் கூறுங்கள் நிச்சயம் இது அவருக்கு சிரிப்பை வரவழைக்கும்.
ஆனால், உங்களை காதலி ஸ்மார்ட்டாக “அப்போ நீ என்னிடம் கோபம் கொள்ளவே இல்லையே? அப்படியானால் உனக்கு என்மீது காதல் இல்லையா”” என கேட்கக் கூடும். உஷாரா சமாளிச்சிடுங்க..!! அடி விழுந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல. இப்படிப்பட்ட சமாதானங்கள், புரிதல் ஈகோவினால் காணாமல் போவதே உறவு முறிவிற்கு காரணம். புரிந்து கொண்டு பிரேக்கப் எண்ணத்தை கைவிடுங்கள். மகிழ்ச்சியாய் இருங்கள்.