தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதென கொள்கையளவான முடிவிற்கு ஜனநாயக போராளிகள் கட்சி வந்துள்ளது.
கடந்த உள்ளூராட்சி தேர்தலிற்கு சற்று முன்னரான காலப்பகுதியில் இருந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகப்பற்றற்ற பங்காளிகளாக செயற்பட்டு வந்த உறவை முடித்துக் கொள்ள ஜனநாயக போராளிகள் தீர்மானித்துள்ளனர்.
சுமார் ஒன்றரை வருடங்களிற்கு மேலாக இரண்டு தரப்பும் கூட்டணியாக செயற்பட்டாலும், கூட்டணியின் சம அந்தஸ்துள்ள பங்காளிகளாக ஜனநாயக போராளிகள் நோக்கப்படவில்லை. அந்த உறவை, “சின்ன வீடு“ உறவு என தமிழ்பக்கம் குறிப்பிட்டிருந்தது. கூட்டமைப்பின் உயர்மட்ட கூட்டங்கள் எதிலும் ஜனநாயக போராளிகள் அழைக்கப்படவில்லை. தமிழ் அரசு கட்சியின் ஒரு சில பிரமுகர்களுடனான உறவாக மட்டுமே அது இருந்து வந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கை முடிவுகளில் செல்வாக்கு செலுத்த முடியாமல், அந்த கட்சி எடுக்கும் எல்லா முடிவுகளின் விமர்சனங்களையும் எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டுமென, ஜனநாயக போராளிகள் கட்சிக்குள் தொடர்ந்து ஏற்பட்ட அழுத்தத்தையடுத்து, இந்த முடிவிற்கு வந்துள்ளதாக தமிழ்பக்கம் அறிகிறது.
இதேவேளை, ஜனநாயக போராளிகள் கட்சி எதிர்காலத்தில் வடக்கு முன்னாள் முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணிக்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
கடந்த பல மாதங்களாகவே விக்னேஸ்வரனை சந்திக்க ஜனநாயக போராளிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். எனினும், அப்போது சந்திப்பை தட்டிக்கழித்து வந்தார் விக்னேஸ்வரன். முன்னர் இராணுவ புலனாய்வுத்துறையுடன் சேர்ந்தியங்கிய குற்றச்சாட்டு காரணமாகவே அவர் சந்திப்பை தட்டிக்கழித்து வந்தார்.
எனினும், கடந்த சில தினங்களின் முன்னர் க.வி.விக்னேஸ்வரன்- ஜனநாயக போராளிகள் சந்திப்பு நடந்தது. இதன்போது, விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியில் இணைய தயாராக இருப்பதாக ஜனநாயக போராளிகள் கோடிகாட்டி பேசினர்.
எனினும், ஜனநாயக போராளிகளின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்டு, மக்கள் நலன்சார்ந்த நிலைப்பாட்டை- கொள்கையை- நிரூபிக்க, நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை விக்னேஸ்வரன் வலியுத்தியதாகவும் அந்த சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்மக்கள் கூட்டணியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தமிழ் பக்கத்திடம் குறிப்பிட்டார்.
இந்த தகவல்கள் தொடர்பில், ஜனநாயக போராளிகள் கட்சியின் பேச்சாளர் துளசியை தொடர்பு கொண்டு கேட்டபோது, சந்திப்பு நடந்ததை உறுதி செய்தார். தமது கட்சி சில அதிருப்தியில் இருப்பதையும், புதிய வடிவமொன்று அவசியமென கட்சி கருதுவதாகவும் குறிப்பிட்டார்.