பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களின் சுயலாப அரசியலுக்காக மக்களையும், இளைஞர்களையும் தவறான பாதையில் வழிநடாத்தி கொண்டிருக்கின்றனர். அவ்வாறான வழி கடந்த காலத்திலும், இனிவரும் காலங்களிலும் நமக்கே மண்ணை வாரிப்போட்ட கதையாக மாறிவிடும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்துதல் தொடர்பாக அவர் ஊடகங்களிற்கு விடுத்த அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்றது. இதற்கிடைப்பட்ட காலங்களில் தமிழ் மக்கள் சார்பான பிரதி அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர்கள், அரசாங்கம் சார்பான பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து போயுள்ளார்கள். இவர்களின் ஆட்சி காலத்தில் தங்களின் சுயலாப அரசியல் வேலைகளில் ஈடுபட்டு விட்டு தற்போது பதவியில் இல்லாத போது விசமத்தனமான விமர்சனங்களை தற்போது முன்வைப்பது அவர்களின் அரசியல் சுயலாபத்தை புடம்போட்டு காட்டுகின்றது. அவ்வாறான பதவிகளில் இருந்து தற்போது அப்பதவிகளில் இல்லாமல் இருப்பவர்களும் இது தொடர்பாக கருத்து தெரிவிப்பதும், உண்ணாவிரதத்தில் பங்கெடுப்பதும் தான் வேடிக்கையாக உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களின் சுயலாப அரசியலுக்காக மக்களையும், இளைஞர்களையும் தவறான பாதையில் வழிநடாத்தி கொண்டிருக்கின்றனர். அவ்வாறான வழி கடந்த காலத்திலும், இனிவரும் காலங்களிலும் நமக்கே மண்ணை வாரிப்போட்ட கதையாக மாறிவிடும். அப்பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் நிலை மறந்து தங்களின் பதவியின் அதிகாரம் மறந்து செயற்பட்டு வருகின்றார்கள். மக்கள் தங்கள் வாக்குகளை அளித்து அவர்களின் பிரதிநிதியாகவே பாராளுமன்றம் அனுப்பி வைக்கின்றார்கள். அங்குதான் மக்களின் பிரச்சினைகளை கதைத்து தீர்வு காண வேண்டிய உயரிய இடம். அதைவிடுத்து மக்களோடு அவர்களின் போராட்டங்களில் பங்கெடுப்பதோடு மட்டும் நின்றுவிட்டு வீதியோர நாடகக்காரரைப்போன்று வேஷம் போட்டு அடுத்த தேர்தலுக்கான பிரச்சார மேடையாக பயன்படுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமன்றி கூட்டமைப்பில் இருந்து ஜனாதிபதியின் கரங்களை பலம் சேர்க்கவே எதிர்கட்சியில் இருந்து ஆளுங்கட்சிக்கு தாவியவர் இன்று ஜனாதிபதியின் ஆதரவோடு மிகவும் இலகுவாக இப்பிரிச்சினைக்கு தீர்வுகாண வேண்டியவர் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதில் என்ன நியாயம் உள்ளது. மக்களை ஏமாற்றும் அரசியலில் கூட்மைப்பு செல்லவில்லை. மாறாக பதவிக்காகவும், பணத்திற்காகவும் அரசியலுக்கு வந்தவர்களே இவ்வாறு மக்கள் இட்ட ஆணையையும் மீறி மக்களை ஏமாற்றுகின்றனர்.
பௌத்த பிக்குகள் சிறுபான்மை இனத்தை கறிவேப்பிலை போன்று நடாத்தி வருகின்றார்கள். இன்று ஒரு சிறுபாண்மை முஸ்லிம் இனத்துக்கெதிராக, தமிழ் இன சிறுபாண்மை இனத்தோடு கைகோர்த்த பௌத்த பிக்குமார் அண்மைக்காலத்தில் மட்டக்களப்பில் இதே பிக்குமார்களுக்கு எதிராகவே இதே இளைஞர்கள் தான் பிக்குமாரை மட்டக்களப்பினுள்ளே நுழைய விடாமலும், மட்டு விகாரையை விட்டு வெளியே வரவிடாமலும் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மட்டுமல்லாமல் பொலிசாரினால் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. அன்று நாம் சிறுபான்மை இனம். இதே நிலை இன்று முல்லைத்தீவில் பிள்ளையார் கோவிலை அபகரித்து பௌத்த விகாரை கட்டியே தீருவோம் என்று கங்கணம் கட்டி அலைகின்ற அதே பௌத்த பிக்குகளுக்கு எதிராக யாரால் பேச முடியும். அங்கும் இதே கூட்டமைப்புத்தான் நுட்பமான முறையில் செயற்படுகின்றது. நாளை இதே கல்முனை தமிழ் பிரதேசத்தில் பௌத்த விகாரை கட்டப்போகின்றார்கள் என்றால் அதற்கெதிராக யார் போராட்டம் செய்வது? அங்கே இப்போது கருத்து தெரிவிக்கும் அமைச்சர்களோ? பாராளுமன்ற உறுப்பினர்களோ வரமாட்டார்கள். ஏனெனில் அவர்களின் சிந்தனையெல்லாம் மக்கள் நலன் இல்லை. அவர்களின் சுயலாப கடமைகள் நிறைவேறும் வரைக்கும் இருந்துவிட்டு சென்று விட்டு விமர்சனம் செய்கின்றனர்.
இதற்கெல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்பே முன்னின்று உழைக்கும். ஆகவே மக்களே சிந்தியுங்கள். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்பதில் எந்தவித மாற்றுக்கருத்துமில்லை. அதனை பெற்றே தீர வேண்டும். அதற்காக பௌத்த மேலாதிக்கத்தின் அனுசரனையுடன் பெற முயற்சிப்பதுதான் நாமே நமக்கு மண்ணை வாரிப்போடுவது போன்ற செயற்பாடாகும். சிறுபான்மை இனமான நாம் பெற வேண்டியவை நிறையவே உள்ளது. அதற்கும் இதே பௌத்த பிக்குமார் இடையூறாகவே இருப்பார்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. எமக்கு கடந்தகாலங்கள் பல வரலாறுகளை கற்றுத்தந்துள்ளது. ஆகவே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் என்பதில் எந்தவிதமான மாற்று கருத்துமில்லை.
கல்முனையில் கூட்மைப்புக்கு எதிர்ப்பு என்று ஊடகங்களிலே பரவலாக பேசப்பட்டது. உண்மையில் அன்றைய தினம் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன், அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் தயா கமகே, அத்துரலிய ரத்ன தேரர், பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஆகியோரும் சென்றிருந்த போது சுமந்திரனுக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஏனையோருக்கு எதுவிதமான செயற்பாடுகளும் நடைபெறவில்லை. மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடே அதுவாகும். அந்நம்பிக்கையை மிக விரைவாக நிறைவேற்றுவார்கள். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செயற்படுத்தி வருகின்றனர், எனவும் தெரிவித்தார்.