இலங்கையில் போதைப்பொருள் குற்றவாளிகள் நால்வருக்கு விரைவில் மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அதற்குரிய அனுமதிப் பத்திரங்களில் கையெழுத்திட்டு விட்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தமையை அடுத்து, சர்வதேச நாடுகள் பலவும் இது தொடர்பில் கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளன.
அந்தவகையில் ஜேர்மனியின் ஆளும் சமஷ்டிக் கட்சியின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான செயற்திட்டங்களுக்கான வெளிவிவகார அலுவலகத்தின் ஆணையாளர் பார்பெல் கொஃப்லர், மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக ஜனாதிபதி சிறிசேன பகிரங்கமாக அறிவித்தமை தொடர்பில் வெகுவாக அவதானம் செலுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மரணதண்டனையை தவிர்ப்பதன் ஊடாக கடந்த 40 வருடங்களுக்கும் அதிகமான காலம் மரணதண்டனை நிறைவேற்றத்தை நிறுத்திவைத்திருக்கும் நடைமுறையைத் தொடர்ந்து பேணுமாறும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கை அதுவாகவே மரணதண்டனைக்கு எதிராக வெளிப்படுத்திய நிலைப்பாட்டைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கொஃப்லர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் மையப்படுத்தி முன்நோக்கிச் செல்லும் பாதையில் மரணதண்டனை நிறைவேற்றம் என்பது மறுபரிசீலனை செய்யப்பட்ட வேண்டியதொன்று எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.