எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய கூட்டமைப்பு உறுப்பினர், சரவணபவன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பாதுகாப்புக்கு அளிக்கப்பட்டுள்ள வாகனங்கள் மோசமான நிலையில் உள்ளதாகவும், இது குறித்து அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் உரையாற்றிய போது, எதிர்கட்சித் தலைவருக்கு இதுவரையில் அதிகாரபூர்வ வதிவிடம் வழங்கப்படவில்லை என்றும், நாட்டில் தற்போது கூலிக்கு கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து உரையாற்றிய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, இரா.சம்பந்தனின் பாதுகாப்பு வாகனங்கள் தொடர்பான இருக்கும் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.