தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பொலிஸார் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த இருதயராஜ் என்பவரின் மகன் கெளரிசங்கர்(33). இவர் தருவைக்குளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி ஜெனிபா (27) தூத்துக்குடி ஆயுதப்படையில் பொலிஸாராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினர் கடந்த 8 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு மகிழினி (4) என்ற மகளும், மாறன் (1) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த இருதயராஜ் கடந்த மாதம் உயிரிழந்துள்ளார். அவருடைய உடலை வீட்டிற்குள் கொண்டு வருவதற்கு ஜெனிபா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அதனையும் மீறி கௌரிசங்கர் உடலை வீட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.
தந்தை இறந்த சோகத்தால் அடுத்த சில நாட்கள் பணிக்கு செல்லாமல் கெளரிசங்கர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இருதயராஜின் உடலை வீட்டுக்குள் கொண்டு வந்ததால், அங்குள்ள டைல்ஸ் கற்களை எடுத்து விட்டு, புதிய டைல்ஸ் கற்களை பதிக்க வேண்டும் என்று ஜெனிபா கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதில் மனமுடைந்து காணப்பட்ட கெளரிசங்கர், தன்னுடைய மகளை ஜெனிபா பள்ளிக்கு அழைத்து சென்றிருந்த நேரம் பார்த்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய ஜெனிபா, கணவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கெளரிசங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்