அர்ஜென்டினாவில் சமையற்கலைஞர்கள் குழு ஒன்று மரபணு கோளாறு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் 500 மீற்றர் நீளம் கொண்ட பீட்சா ஒன்றை சமைத்து சாதனை புரிந்துள்ளனர்.
அர்ஜெண்டினாவின் Buenos Aires பகுதியில் ஞாயிறு அன்று இந்த சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அந்த நாட்டின் தலைசிறந்த சமையற்கலைஞர்கள், அவர்களின் உதவியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பார்வையாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர்.
குறித்த விழாவில் தயார் செய்யப்பட்ட பீட்சாவானது துண்டு ஒன்றிற்கு 2 டொலர் என விற்கப்பட்டது. 500 மீற்றர் நீளம் கொண்ட குறித்த பீட்சா தயாரிக்க 750 கிலோ மாவும், 450 லிற்றர் தண்ணீரும், 750 கிலோ மொஸெரெல்லா சீஸ், 300 கிலோ பன்றி இறைச்சி, 300 லிற்றர் தக்காளி சட்னி மற்றும் 25,000 ஆலிவ் பயன்படுத்தியுள்ளனர்.
அதிகரித்து வரும் மரபணு கோளாறு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த விழாவினை Pizzeria மற்றும் Empanada நிறுவனத்தினர் ஒருங்கிணைத்திருந்தனர்.
மரபணு கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்காமல் அவர்களுக்கும் வேலை வாய்ப்பு மற்றும் அவர்களின் அன்றாட வாழ்வியல் சிக்கல்களை எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கு உதவுவது உள்ளிட்டவைகளை ஊக்குவிப்பதே இந்த நிகழ்வின் நோக்கம் என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.