மலையக இளைஞர்களை தூண்டிவிட்டு கூத்து பார்க்காதீர்கள். மலைய இளைஞர்கள் இந்த நாட்டில் ஆயுதம் ஏந்தவில்லை தனிநாடு கோரவும் இல்லை. சுதந்திரமாக வாழவே நினைக்கின்றார்கள் என்று பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டங்களில் கைவிடபட்ட நிலையில் காணப்படும் தரிசு நிலங்களை பாவணைக்கு உட்படுத்தி இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் புதிய செயற்திட்டம் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பெருந்தோட்டங்களை கம்பனிகளுக்கு நாங்கள் கொடுத்தது போல் தோட்டங்களை முறையாக பராமரிக்க முடியாவிட்டால் தோட்ட தொழிற்சாலைகள் எங்காவது மூடபட்டு இருந்தால் அதனை முறையாக பயன்படுத்த வேண்டும்.
அதனை பெருந்தோட்ட நிறுவனங்கள் முறையாக செய்யாவிட்டால் தோட்ட காணிகளை தொழிலாளர்கள் பயன்படுத்தலாம். அதே போல் பெருந்தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்களில் இளைஞர்கள் விவசாயம் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேன்மை அடைய செய்துக் கொள்ள முடியும். இதனை செய்வதால் இவர்களில் எவரும் தவறு செய்தவர்கள் கிடையாது. ஆனால் தோட்ட நிர்வாகங்கள் தாங்களும் பயன்படுத்தவது இல்லை பயன்படுத்தக் கூடிய தொழிலாளர்களுக்கோ அல்லது வேலையற்ற தோட்ட இளைஞர்களுக்கோ வழங்குவதும் இல்லை. தங்களுக்கு தேவையான தனியாருக்கு வழங்குகின்றனர். இதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. தோட்டங்களை முறையாக நிர்வாகங்கள் நடாத்தவிட்டால் கைவிட்டால் அது தோட்டத்தில் உள்ளவர்களுக்கே சொந்தமானது.
இந்த செயற்பாடுகளை மலைய தோட்ட புரங்களில் முன்னெடுக்கும் பொழுது சில தோட்ட நிர்வாகங்கள் பிழையாக சித்தரித்து பொலிஸாரினால் கைதும் விசாரனைகளும் மேற்கொள்கின்றனர். அதற்கு பொலிஸாரும் உதவி செய்கின்றனர். இது கோப்பி காலம் அல்ல. அப்போது பயமுருத்தியது போல் பயமுருத்த இதற்காக தோட்ட இளைஞர்களை கைது செய்ய முடியாது. இவ்வாறான செயற்பாடுகள் பதுளை பிரதேசத்தில் பதிவாகியும் உள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பதுளை மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளுடனும் பேசி பாதுகாப்பை உறுதிபடுத்தி உள்ளேன். தோட்ட தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்கள் வருமானத்திற்காக மாடு வளர்ப்பிற்கு பட்டிகள் அமைக்க வேண்டும் மலசலகூடம் அமைக்க வேண்டும்¸ வீட்டை சற்று தள்ளி கட்ட வேண்டும் என்றால் தோட்ட காணியையே பாவிக்க முடியும். இந்த நவீன் யுகத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளவும் வேண்டும். இதனை தானே இந்த நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் கூறுகின்றனர். இதை நடைமுறைப்படுத்தும் போது தோட்ட நிர்வாகங்கள் பல்வேறு குழறுபடிகளை பெருந்தோட்ட மக்கள் மீது சுமத்தி வருகின்றனர். இதனால் மக்கள் பெரும் இன்னல்களை அனுபவிக்கின்றனர்.
இனி இந்த தரிசு காணிகளை பாவிப்பவர்களுக்கு எதிராக வழக்கு தொடரவோ பொலிஸாரினால் கைது செய்யவோ முடியாது. எங்கள் மலையக இளைஞர்களுக்கும் சுகந்திரம் இருக்கின்றது. மலைய இளைஞர்கள் இந்த நாட்டில் ஆயுதம் ஏந்தவில்லை தனிநாடு கோரவும் இல்லை. நாங்கள் சுதந்திரமாக வாழவே நினைக்கின்றோம். பெருந்தோட்டகளில் தரிசு நிலங்கள் இருந்தால் மலையக இளைஞர்களே மரக்கரி செய்கைபன்ன முடியும். இல்லாவிட்டால் சீனாவில் இருப்பவர்களா மரக்கரி செய்கை பன்னமுடியும்.
இச் சந்தர்பங்களில் தோட்ட அதிகாரியும் பொலிஸாரும் பொருப்பாக நடந்துக் கொள்ள வேண்டும். மலையக இளைஞர்களை தூண்டிவிட்டு கூத்துபார்க்காதீர்கள். நான் தெளிவாக சொல்லுகின்றேன் நானும் தொழிற்சங்கம் செய்கின்றேன். எங்களுக்கும் போராட்டம் செய்ய முடியும். பொலிஸாருக்கு வேறு வேலைகள் இருக்கின்றன. கொலை கொள்ளை கசிப்பு உற்பத்தி போன்ற சட்ட விரோத செயல்கள். அதை பார்கலாம் அதை விட்டுவிட்டு தோட்ட இளைஞர்கள் தோட்ட தரிசு காணிகளில் விவசாயம் செய்ததற்காக கைது செய்ய முடியாது. தோட்ட அதிகாரிகளுக்கு துணை போய் மலையகத்தில் வேறு பிரச்சனைகளை தோற்றுவித்துவிட வேண்டாம் என்று கூறினார்.