சொந்த மகளையே கடத்திய வழக்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நடிகை வனிதா விஜயகுமாரிடம் தெலுங்கானா காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
நடிகை வனிதா விஜய் குமார் தனது மகளைக் கடத்தியதாக அவருடைய 2வது கணவரான ஆனந்த்ராஜ், தெலுங்கானா காவல்துறையிடம் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து வனிதா விஜய்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முதல் திருமணம் விவாகரத்து ஆன பின்பு ஆனந்தராஜை 2007ம் ஆண்டு திருமணம் செய்தர் வனிதா.
பின்பு இவர்களுக்கு ஒரு மகள் இருந்த நிலையில் 2012ம் ஆண்டில் ஆனந்த்ராஜையும் வனிதா விவாகரத்து செய்தார். 2வது கணவரையும் பிரிந்த வனிதா, தனது மகள் ஜெனிதாவைப் பார்க்க ஹைதராபாத்துக்குச் சென்றுள்ளார்.
அப்போது, மகளை யாருக்கும் தெரியாமல் அழைத்துவந்துவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து வனிதா மீது காவல்துறையிடம் புகார் அளித்தார் ஆனந்த்ராஜ். வனிதா விஜய்குமாருக்கு நிரந்தர முகவரி இல்லாததால் அவரைத் தேடுவதில் சிரமம் எற்பட்டதாக ஆனந்த்ராஜ் தெரிவித்துள்ளார்.
வனிதா, தற்போது பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் வனிதா விஜய்குமாரையும் அவருடைய மகளையும் தேடிவந்த தெலுங்கானா காவல்துறை தமிழகக் காவல்துறையினர் உதவியை நாடியுள்ளது.
நசரத்பேட்டை காவல்துறை உதவியுடன் தெலுங்கானா காவலர்கள், வனிதா விஜய்குமாரிடம் விசாரணை நடத்த பூந்தமல்லியில் ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் அமைந்துள்ள பிக்பாஸ் அரங்கத்துக்குள் சென்றுள்ளார்கள். விசாரணைக்குப் பின்பு அவர்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவருவதாக கூறப்படுகின்றது.