பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட சியால் கோட்டில் அமைந்திருக்கும் மிகப் பழமையான இந்துக் கோயில் சுமார் 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டதன் பேரில், பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினமான இந்து சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஷவாலா தீஜா சிங் கோயில் திறக்கப்பட்டுள்ளது.
இந்து முறைப்படி கோயிலில் பரிகாரப் பூஜைகள் செய்யப்பட்டு கோயில் திறக்கப்பட்டதாக தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்துக் கோயிலைத் திறக்க வேண்டும் என்று பல ஆண்டு காலமாக இந்து சமுதாய மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர் என்று வழிபாட்டுத் தலங்களுக்கான துணைச் செயலர் சயீத் பராஸ் அப்பாஸ் கூறினார்.
கோயிலை மறுசீரமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இந்தியாவில், இருந்து இந்து மதக் கடவுள் சிலைகள் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்படும்.
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மூடப்பட்ட இந்த கோயில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உத்தரவின் பேரில் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்புதான், சியால்கோட்டில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா கோயிலும், இந்திய சீக்கிய பக்தர்கள் உள்ளே நுழைய அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு, இந்த குருத்வாரா கோயிலுக்குள் பாகிஸ்தானியர்கள் மட்டுமே நுழைய முடியும். இந்திய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.