நாட்டின் அரசியல் சூழலில் தற்போதைய நிலைமையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் அதனூடாக அறிமுகப்படுத்தப்படவுள்ள தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டம் என்பன தொடர்பிலேயே பாரிய வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
விசேடமாக அரசியலமைப்பு வரைபில் வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கு தீர்வைக் காணும் நோக்கில் எவ்வாறான திட்டங்கள் முன்வைக்கப்படும் என்பதில் அனைத்துத் தரப்பினரும் அவதானம் செலுத்தியுள்ளனர்.
இந்த அரசியல் தீர்வு என்று வரும்போது அது மிகவும் ஒரு உணர்வுபூர்வமான விடயமாகவே காணப்படுகின்றது. அதனால் இந்த விடயத்தை மிகவும் அவதானத்துடனும் கவனமாகவும் பொறுப்புடனும் முன்கொண்டுசெல்ல வேண்டியுள்ளது.
குறிப்பாக தென்னிலங்கை மக்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மக்கள் என அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான தீர்வுத் திட்டமொன்றை அடைய வேண்டியது அவசியமாகும்.
இந்த விடயத்தில் அனைத்துத் தரப்புக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான ஒரு தீர்வுத்திட்டத்திற்கு செல்ல வேண்டியது தற்போதைய நிலைமையில் ஒரு சவாலான விடயமாகவே பார்க்கப்படுகின்றது.
காரணம் அரசியல் தீர்வுத் திட்டம் என்று வரும் போது கடந்த காலம் முழுவதும் தமிழ் பேசும் மக்கள் ஏமாற்றப்பட்டு வந்த வரலாறே காணப்படுகின்றது.
சில சந்தர்ப்பங்களில் தமிழர் தரப்பினர் மிகவும் நம்பிக்கையிலிருந்த கால கட்டங்களிலும் இறுதியில் ஏமாற்றமே கிடைத்தது.
அந்தவகையில் எதிர்வரும் காலங்களில் அவ்வாறான ஒரு ஏமாற்ற நிலைமைக்கு தமிழர் சமூகம் மீண்டும் சென்றுவிடக்கூடாது.
இந்த இடத்தில் அரசியல் தீர்வு விடயத்தில் நம்பிக்கைத் தன்மையுடன் செயற்பட வேண்டியது எந்தளவு தூரம் அவசியமோ, அதேபோன்று பொறுப்புடனும் கவனமாகவும் செயற்பட வேண்டியதும் அவசியமாகும்.
அந்தவகையில் யாழில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் அரசியல் தீர்வை நோக்கி செயற்படும் போது நம்பிக்கையுடன் செயற்படுவது எந்தளவு தூரம் அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
அதாவது நாங்கள் ஏமாற்றப்பட்டோம். இனியும் ஏமாற்றப்படுவோம் என்ற சிந்தனைகளுடன் எப்போதும் செயற்பட முடியாது. அரசியல் தீர்வு என்பது தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல. இந்த நாடு பொருளாதார ரீதியில் முன்னேறிச் செல்வது சிங்கள மக்களுக்கும் அவசியமானதாகும்.
இந்த விடயத்தில் எமக்குள்ளே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மக்களுடைய விடயங்களில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயற்படவேண்டும்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கிடைத்துள்ள தற்போதைய அரிய சந்தர்ப்பத்தை சரிவர பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
அதேவேளை, இன்று நாம் முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். நீண்டகாலமாக கிடைக்கப்பெற முடியாத எமது பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தற்போது கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
அந்தத் தீர்வை அடைவதற்கு நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் நாம் பல சந்தர்ப்பங்களை இழந்திருக்கின்றோம் எனவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
தற்போது எல்லாம் நடைபெற்று விட்டது என்று கூறிவிட முடியாது. அதேபோன்று ஒன்றும் நடக்கவில்லை என்றும் கூற முடியாது. தீர்வு விடயத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் உறுதியுடன் செயற்பட்டு வருகின்றார்கள். இதில் நாங்கள் வெற்றிபெற வேண்டுமானால் நம்பிக்கையுடனும் நிதானமாகவும் செயற்படவேண்டும்.
நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்றும் ஏமாற்றப்படுவோம் என்ற சிந்தனையிலும் தொடர்ந்தும் செயற்பட முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மிகவும் தெட்டத் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார்.
உண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கூறுவது போன்று தீர்வு விடயத்தில் அனைத்துத் தரப்பினரும் நம்பிக்கையுடனும் புரிந்துணர்வுடனும் செயற்படவேண்டியது அவசியமாகும்.
விசேடமாக வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் போது அந்தத் தீர்வுத்திட்ட விடயத்தில் தென்னிலங்கை மக்கள் சந்தேகம் கொள்ளாத வகையிலும் இனவாதிகள் அதனை குழப்பி விடாத வகையிலும் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.
மாறாக இனவாதிகள் இந்த விடயத்தை குழப்புவதற்கு ஆரம்பித்து விட்டால் தீர்வுத் திட்டத்தை நோக்கி பயணிக்கும் நிலைமையானது மோசமடைந்து விடும்.
எனவே, இந்த இடத்தில் சாமர்த்தியமாகவும் நிதானமாகவும் செயற்பட வேண்டும் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கூற்று ஆக்கபூர்வமானதாகவும் தீர்க்கமானதாகவும் காணப்படுகின்றது.
ஆனால் இந்த விடயத்தில் மிகவும் சாதுரியமாகவும் நடந்து கொள்ள வேண்டிய தேவை தமிழர் தரப்பிற்கு காணப்படுகின்றது. ஏமாற்றப்பட மாட்டோம் என்ற எடுகோளில் தீர்வுத் திட்டத்தில் தமிழர் தரப்பு பயணிக்க முடியாது.
காரணம் கடந்த காலங்களில் நாம் பெற்றுள்ள அனுபவங்களையும் பாடமாகக் கொண்டே செயற்பட வேண்டிய தேவை இங்கு காணப்படுகின்றது.
காரணம் தமிழர் தரப்பு எந்தளவு தூரம் நம்பிக்கையுடன் செயற்பட்டாலும் தென்னிலங்கையில் ஏற்படுகின்ற அரசியல் கள நிலைவரங்கள், சூழல் என்பன நிலைமையை தலைகீழாக மாற்றிவிடும் தன்மையைக் கொண்டன என்பதை எப்போதும் தமிழர் தரப்பு மனதில் வைத்துக்கொண்டு செயற்பட வேண்டியது அவசியமாகும்.
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் தீர்வு விடயத்தில் மிகவும் ஆரோக்கியமான பாதையில் பயணிக்கின்றது என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
விசேடமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இந்தத் தீர்வு விடயத்தில் அர்ப்பணிப்புடனும் நம்பிக்கை தரும் வகையிலும் செயற்பட்டு வருகின்றனர்.
இது தமிழர் தரப்பு மத்தியில் நம்பிக்கையை மேலோங்கச் செய்கின்றது. ஆனால், தென்னிலங்கையில் அவ்வப்போது வெளிக்காட்டப்படுகின்ற இனவாத சக்திகளின் செயற்பாடுகள் தீர்வு விடயத்தில் தமிழர் தரப்பில் ஒரு வித அச்சத்தையும் ஏற்படுத்துகின்றது என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
ஆகவே, இந்தத் தீர்வு விடயத்தில் தமிழர் தரப்பு எந்தளவு தூரம் நம்பிக்கையுடன் செயற்படுகின்றதோ அதேயளவு அவதானத்துடனும் காய்களை நகர்த்த வேண்டியது அவசியமாகும்.
2016ம் ஆண்டின் இறுதிக்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வுத் திட்டத்தை நோக்கி பயணிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கடந்த வருடம் கூறியிருந்தார்.
அந்தவகையில் தற்போது 2016ம் ஆண்டு நிறைவடையும் தறுவாயில் நாம் இருக்கின்றோம். அப்படி பார்க்கும்போது தீர்வு விடயத்தில் என்ன அடைவு மட்டத்தை கண்டுவிட்டோம் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழலாம்.
ஆனால், இக்காலப்பகுதியில் எதுவும் நடைபெறவில்லையென்று கூறமுடியாது. தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான தீர்வுத்திட்டமொன்றை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசியல் மட்டத்தில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அரசியலமைப்பை தயாரிக்கும் பிரதான பணியை முன்னெடுக்கும் அரசியல் நிர்ணயசபை பிரதான வழிநடத்தல் குழுவானது மூன்று முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறது.
தேர்தல் முறை மாற்றம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட முறை மாற்றம் மற்றும் அதிகாரப்பகிர்வு ஆகிய மூன்று விடயங்களே பிரதான வழிநடத்தல் குழுவினால் ஆராயப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பிரதான வழிநடத்தல் குழுவானது தற்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராய்ந்து வருகிறது. அது தொடர்பான அறிக்கையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு பார்க்கும்போது தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது.
எவ்வாறெனினும் இந்த விடயங்கள் மிகவும் ஆரோக்கியமான முறையில் இடம்பெறவேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது போன்று தீர்க்கமான இந்த கட்டத்தில் அனைத்து தரப்பினரும் நிதானமான முறையில் செயற்படவேண்டும்.
அதேநேரம் கவனமாகவும், பொறுப்புடனும் செயற்படவேண்டிய தேவையும் காணப்படுகின்றது.
எக்காரணம் கொண்டும் தமிழர் தரப்பினர் மீண்டும் ஏமாற்றமடையும் நிலைக்கு அரசாங்கம் செயற்படக்கூடாது.
அத்துடன் தமிழர் தரப்பும் நிலைமையை புரிந்து சாணக்கியமாக செயற்படவேண்டும்.
கிடைத்திருக்கின்ற தற்போதைய தீர்க்கமான மற்றும் அருமையான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான தீர்வுத் திட்டமொன்றை பெற்றுக் கொள்ள வேண்டியது அனைத்துத் தரப்பினரதும் பாரிய பொறுப்பு என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.