ஜெனீவாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கு முன்னதாக புதிய அரசியல் யாப்பை நாடாளுமன்றில் சமர்பித்து நிறைவேற்ற மைத்திரி – ரணில் அரசாங்கம் முயற்சித்து வருவதாக கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.
நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுவரும் புதிய அரசியல் யாப்பை நிறைவேற்ற இடமளிக்காது அதனை தோற்கடிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, இந்த நடவடிக்கையில் அனைவரையும் ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமை வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்றது.
“புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் இனவாதிகளையும், ஜனவரி 8ஆம் திகதி ஆட்சிமாற்றத்திற்கு உதவிய புலம்பெயர் அமைப்புக்களையும் மகிழ்விப்பதற்கும் விக்கிரமசிங்க – சம்பந்தன் கூட்டுக் குழு செயற்படுகிறது.
இது அரசியலமைப்புச் சபையின் அறிக்கை எனவும், நாடாளுமன்றம் பொறுப்புகூறுகின்ற அறிக்கையாகவும் நாங்கள் கூறமாட்டோம்.
இது சம்பந்தன் – விக்ரமசிங்கவின் கூட்டு அறிக்கையாகும். இதற்கு முன்னர் சந்திரிக்காவின் பொட்டலமாக வந்தது.
இன்று இன்று சம்பந்தன் – ரணிலின் பொட்டலத்திற்கு ஒத்துழைப்பதற்கு சிவப்பு யானைகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. புதிய அரசியலமைப்புச் சபை, மனித உரிமைகள் ஆகிய இளைய சகோதரியை முன்நிறுத்தி இந்த இனவாத மூத்த சகோதரியை வழங்க முயற்சிக்கின்றனர்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்விற்குச் சென்று அங்கு வளர்ச்சி அறிக்கையை சமர்பிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஜெனீவாவில் மங்கள சமரவீர வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக அங்கு கூறவுள்ளதோடு, எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் இந்த புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முயற்சிக்கிறது.
எனவே மகாநாயகர்களும், சர்வமதத் தலைவர்களும் இதுகுறித்து நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த புதிய அரசியலமைப்பில் வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து நேரடியாக கூறியிருக்காவிட்டாலும் அதனை இறுதி பிரேரணையில் நிறைவேற்றவே அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அன்று சந்திரிகாவின் பொட்டலத்தை தோற்கடித்ததைப் போன்று அதைவிடவும் பயங்கரமான சம்பந்தன் – ரணில் கூட்டு முயற்சியை தோற்கடிக்க ஒன்றிணையுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.
இதேவேளை அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்படலாம் என்ற எச்சரிக்கையை விடுத்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரது இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை தோற்றிவிருப்பதோடு ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் இராணுவப் புரட்சியை மேற்கொள்ள திட்டமிடுவதாக அரச தரப்பிலிருந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக இன்றைய ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அரசாங்கத்தின் இந்தக் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்தார்.
“சூழ்ச்சியின் ஊடாக ஆட்சியைக் கைப்பற்றியவர்களுக்கே எந்நேரமும் சூழ்ச்சி இடம்பெறுவதாக சிந்தித்துக் கொண்டிருப்பது இயற்கையாகும். ஜனவரி 8ஆம் திகதி ஆட்சி மாற்றத்தை மேற்கொள்ள அமெரிக்காவிடமும், உளவுப் பிரிவிடம் இருந்தும் பணம் பெற்றது இவர்களே. நாங்கள் அவ்வாறு சூழ்ச்சி செய்பவர்கள் அல்ல. எந்த மந்திரமும் நாங்கள் செய்வதில்லை.
தகுந்த நேரத்தில் மக்களுடன் இணைந்து ஆட்சியைக் கவிழ்ப்பதோடு, நாடாளுமன்றத்தில் எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி அதனை நிறைவேற்றுவோம்” – என்றார்.