தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை முகப்பாக கொண்ட வாரப்பத்திரிகையொன்றை விற்பனைக்கு எடுத்துச் சென்ற வாலிபர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட விசாரணைகளின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவை தளமாக கொண்ட உலகத்தமிழர் பேரவையினால் யாழில் அச்சிடப்பட்டு வெளியிடப்படும் தீபம் வாரப்பத்திரிகையை விற்பனை செய்த வாலிபரே கைதாகினார்.
கடந்த சில மாதங்களாக பெரும் விற்பனை வீழ்ச்சியை சந்தித்த தீபம் வாரஇதழ், தற்போது சுமார் 500 அளவான பிரதிகளே விற்பனையாகிறது. இதனால் விற்பனையை உயர்த்தும் உத்தியாக, முகப்பில் பெரியளவில் பிரபாகரன் படத்தை இந்த வாரம் தீபம் இதழ் பிரசுரித்திருந்தது.
இந்த நிலையில் இன்று காலையில் பிரபாகரன் படத்துடன் கூடிய பத்திரிகைகளை விற்பனை செய்ய நெடுங்கேணிக்கு எடுத்துச் சென்ற வாலிபரை, நெடுங்கேணி சோதனைச்சாவடியில் இராணுவத்தினர் கைது செய்தனர். காலையிலிருந்து மதியம் வரை அவர் துருவிதுருவி விசாரிக்கப்பட்டார். பின்னர் உலகத்தமிழர் பேரவை பிரதிநிதிகள் ஐ.தே.க உயர்மட்டத்தை தொடர்பு கொண்டதாக தெரிகிறது.
இன்று மாலையில் அந்த வாலிபரிடம் பொலிசார் வாக்குமூலம் பதிவுசெய்து விட்டு விடுதலை செய்துள்ளனர்.