கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலான புதிய கூட்டணி தொடர்பிலான முயற்சிகள் தோல்வியடைந்தமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான அச்சுறுத்தலை நீக்கியுள்ளதாக கூட்டமைப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத உயர்மட்ட தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி உட்பட கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டணியொன்று உருவாக்கப்படுவது தொடர்பான முயற்சிகள் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்தன.
குறித்த முயற்சிகள் தோல்வியடைந்து இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமையை அடுத்தே கூட்டமைப்பினரால் இவ்வாறு கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த கூட்டணி உருவாகியிருக்குமெனில் அண்மைக்காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதிருப்தி அடைந்துள்ள வாக்குகளை கவர்ந்திழுக்கும் நிலை காணப்பட்டது.
ஆனால் மாற்றுத்தலைமை எனக் கூறிக்கொள்வோரினால் தங்களுக்குள்ளேயே ஒற்றுமைப்பட முடியாத நிலைமை வாக்காளர்கள் மத்தியில் அவர்கள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தாது
எனவே அடுத்து வரும் தேர்தல்களில் வாக்களிப்பு வீதம் வீழ்ச்சியடைவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்ற போதிலும் கூட்டமைப்புக்கான வெற்றி வாய்ப்புக்களில் பெரிதளவில் தாக்கம் ஏற்படாது எனவும் குறித்த கூட்டமைப்பு தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.