மாயமான மலேசிய விமானத்தில் திருட்டுத்தனமாக பயணித்த நபரால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி அதிலிருந்த 239 பயணிகளும் கொல்லப்பட்டிருக்கலாம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி மலேசிய தலைநகரில் இருந்து சீனா தலைநகருக்கு விமான ஊழியர்கள் உள்ளிட்ட 239 பயணிகளுடன் புறப்பட்ட MH370 என்ற மலேசிய விமானம் என்ன ஆனது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான எந்த தகவலும் வெளியாகவில்லை.
விமானம் மாயமாகி இதுவரை பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் அந்த விமானத்தை கண்டுபிடிக்கவோ, அதில் பயணம் செய்தவர்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பிலோ எந்த தகவலையும் உறுதிப்படுத்த அதிகாரிகளால் இதுவரை முடியவில்லை.
ஆனால் தற்போது உலக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் விமானப் பாதுகாப்பு நிபுணர் டிம் டெர்மினி என்பவர் புதிய கருத்து ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், மாயமான மலேசிய விமானத்தில் திருட்டுத்தனமாக பயணித்த பயணி ஒருவரே அந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என டிம் டெர்மினி தெரிவித்துள்ளார்.
மேலும், மலேசிய விமானம் மாயமானதற்கு நான்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறும் அவர், பயணிகளில் ஒருவர் விமானத்தை கடத்தியிருக்கலாம் எனவும்,
அல்லது விமான ஊழியர்களில் ஒருவர் அதை செய்திருக்கலாம் எனவும், அல்லது விமானத்தில் திருட்டுத்தனமாக பயணித்த ஒருவர், அல்லது விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு முழுவதையும் முடக்கிய ஒருவர் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதில் சட்டவிரோதமாக பயணம் செய்த பயணி மீதே தமக்கு சந்தேகம் இருப்பதாக கூறும் டிம் டெர்மினி, அதனாலையே அந்த விபத்து தொடர்பில் உறுதியான தகவல்கள் ஏதும் இதுவரை வெளிவரவில்லை என்கிறார் அவர்.
ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என கூறும் நிபுணர்கள், விமானம் மாயமாவதற்கு முழு முக்கிய காரணம் விமானிதான் என்கின்றனர்.
இது விமானியின் தற்கொலை மற்றும் கூட்டப்படுகொலை என்றே நிபுணர்கள் கருதுகின்றனர். 40,000 அடிக்கு மேலே விமானத்தை கொண்டு சென்ற விமானி, அந்த அழுத்தம் தாளாமல் பயணிகள் மரணமடைவது அவரது நோக்கமாக இருக்கலாம் எனவும், பின்னர் விமானத்தை கடலுக்குள் வீழ்த்தினார் எனவும் நிபுணர்களின் கருத்து.