பல்லாண்டுகால பகைவெறியுடன் பழங்குடி சமூங்கள் தங்களுக்குள் தாக்குதல் நடத்தி மோதிக்கொண்டதில் பாப்புவா நியூகினியில் கர்ப்பிணிப்பெண்கள், குழந்தைகள் உட்பட 16 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளமைக்கு ஐ.நா கண்டனம் வெளியிட்டுள்ளது.
பாப்புவா நியூகினியின் ஹெலா பகுதியிலுள்ள புறநகர் கிராமமான கரிடா என்ற இடத்தில் கடந்த திங்கட்கிழமை இந்தச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.
மூன்று தசாப்தகாலங்களுக்கு மேலாக பழங்குடி சமூகங்களுக்கு மத்தியில் காணப்பட்ட பகையுணர்வினாலும் பழிவாங்கும் வெறியினாலும்தான் கடந்த திங்கட்கிழமை இந்தச்சம்பவம் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
முன்பு அம்புகள், ஈட்டிகள் போன்ற பாரம்பரிய ஆயுதங்களை வைத்து சண்டையிட்டு வந்த இந்த பழங்குடியினருக்கு தற்போது சட்டவிரோதமாக நவீன ரக ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றிருப்பதால் அவற்றினால் தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.
முன்பு இடம்பெற்ற தாக்குதல்களில் இறந்தவர்களின் உறவினர்களே, தாக்குதல் நடத்தியவர்களின் உறவினர்களை இலக்கு வைத்து பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்றும் இந்த தாக்குதல் மறைந்திருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக அறியமுடிகிறது என்றும் படுகொலை செய்யப்பட்டவர்களை அடித்தும் வெட்டியும் தாக்குதல்காரர்கள் தங்கள் பகைவெறியை தீர்த்திருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தப்பின்னணியில் குறிப்பிட்ட சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளது யுனிசெவ்.