அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நியூயார்க் நகரில் பாதுகாப்புக்கு மட்டும் ஒரு மில்லியன் டொலர்கள் செலவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தெரிவாகியுள்ளார். தற்போது நியூயார்க் நகரில் வசித்துவரும் டிரம்புக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் அலுவலகங்களுக்கும் நியூயார்க் மாகாணம் உயர்தர பாதுகாப்பை வழங்கி வருகிறது.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மட்டும் நியூயார்க் நகர நிர்வாகம் தினசரி ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை மதிப்பில் ரூ.14,85,450,00) செலவிட்டு வருவதாக நகரத்தின் மேயர் பில் பிளாசியோ தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற ஒரு சூழல் இதுவரையான அமெரிக்க வரலாற்றில் எழுந்தது இல்லை என கூறியுள்ள பிளாசியோ, ஜனாதிபதியாக தெரிவான நபர் ஒருவர் தொடர்ந்து இதுபோன்று தங்கியதில்லை என்று தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி டிரம்பின் எதிர்கால திட்டம் குறித்தும் இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும் அடுத்த 65 நாட்களும் தொடர்ந்து அவர் நியூயார்க் நகரில் தங்கியிருப்பார் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிலை குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசித்து பாதுகாப்புக்கு என்று செலவான தொகையில் ஒரு பகுதியை திரும்பப்பெற வாய்ப்பு உள்ளதா எனவும் ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மட்டுமின்றி மெலானியா டிரம்ப் தற்போதைய நிலையில் வெள்ளை மாளிகைக்கு குடிபெயர்வதாக இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. காரணம் அவர்களது 10 வயது மகன் பாரோன் தனது கல்வியை முடித்த பின்னரே அவர் டிரம்புடன் வெள்ளை மாளிகையில் இணைவார். அதுவரை நியூயார்க் நகரில் குடியிருப்பார் என கருதப்படுகிறது.
டிரம்பின் அலுவலகம் மற்றும் வணிக வளாகமான டிரம்ப் டவருக்கு ஏற்கனவே பாதுகாப்பு அரண் அமைத்து 24 மணை நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நியூயார்க் காவல்துறையினருக்கு அடுத்த 65 நாட்களும் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்றும், அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டிரம்புக்கு மட்டுமல்ல, அவர் குடியிருக்கும் பகுதிக்கும் உச்சகட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் காவல்துறை உயர் அதிகாரி ஜான் மில்லர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு யூன் மாதம் 30 ஆம் திகதிவரை நியூயார்க் நகரில் தங்கியிருந்த தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய கணக்கில் 26 மில்லியன் டொலர் தொகை மத்திய அரசிடம் இருந்து திரும்பப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.