குழந்தையை பிரசவித்து வீட்டு தோட்டத்தில் புதைத்து விட்டு உயிரிழந்த தாய் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு ஹட்டன் நீதவான், காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொட்டகலை – யுனிபீல்ட் தோட்டத்தில் வசித்து வந்த 39 வயதான குறித்த பெண், கடந்த சில தினங்களுக்கு முன்னர் குழந்தையை பிரசவித்து அதனை இரகசியமாக வீட்டுதோட்டத்தில் புதைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர் அந்த பெண் ஆபத்தான நிலையில் இருந்த போது, பிரதேச வாசிகளால் அவா் கடந்த 11 ஆம் திகதி டிக்கோயா மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்துள்ள பெண்ணின் கணவர் கொழும்பில் வேலை செய்து வருவதுடன், அவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும், ஓர் ஆண் குழந்தையும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
மரண விசாரணையில் ஏற்ப்பட்ட சந்தேகத்தால் நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளபட வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது.
இதற்கமைய ஹட்டன் நீதவான் முன்னிலையில் உயிரிழந்துள்ள பெண்ணால் வீட்டுதோட்டத்தில் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, டிக்கோயா மருத்துவமனையில் சட்டவைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக எமது நிருபர் தெரிவித்தார்.
இந்நிலையில் உயிரிழந்துள்ள பெண்ணின் சடலம், டிக்கோயா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹட்டன் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.