ஏ.டி.எம். இயந்திரத்தையே பெயர்த்து எடுத்து கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இந்தியாவில் இடமபெற்றுள்ளது.
இந்தியாவின் மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில், பீட் பைபாஸ் வீதியில் உள்ள துத்தா மந்திர் எதிரே பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது.
இந்த மையத்தில் 2 ஏ.டி.எம். இயந்திரங்கள் இருந்தன. இந்த நிலையில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் மர்ம ஆசாமிகள் சிலர் ஜீப்பில் வந்து ஏ.டி.எம். மையத்துக்குள் இருந்த ஒரு ஏ.டி.எம். இயந்திரத்தை பெயர்த்து எடுத்து ஜீப்பில் ஏற்றி சென்றுள்ளனர்.
கொள்ளையின் போது அந்த ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடிகள் உடைந்துள்ளது. இந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் விரைந்து வந்து பார்த்தனர். அதற்குள் கொள்ளை ஆசாமிகள் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடிகள் உடைந்து கிடந்ததையும், அங்கு இருந்த ஒரு இயந்திரம் மாயமானதையும் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அறிந்த பண்டலிக் நகர் போலீசார் விரைந்து வந்தனர். கொள்ளையர்கள் தூக்கி சென்ற ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.25 லட்சம் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.