இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரிவினால் மீண்டும் ஒரு தடவை ரணிலின் ஆட்சி தப்பிப்பிழைத்திருக்கின்றது. என்றாலும், தமிழ்த் கூட்டமைப்பு நேற்றுத் தன் கைவரிசையைக் காட்டி, சாதிக்க வேண்டியவற்றை சத்தம் சந்தடியின்றி சாதித்திருக்கின்றது.
சுமந்திரன் எம்.பி. தனது விடாப்பிடி தந்திரோபாயத்தால் ஏதோ ஒன்றை செய்து முடித்திருக்கின்றார்.
விடயத்துக்குள் இறங்க முன்னர், ரணில் ஆட்சி மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நேற்று மாலை நாடாளுமன்றத்தில் இறுதியாக நடந்த வாக்கெடுப்பு விவரத்தைக் கவனிக்க வேண்டும்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகள் விழுந்தன. எதிராக 119 வாக்குகள். இந்த 119 வாக்குகளில் 14 வாக்குகள் தமிழ்க் கூட்டமைப்பினுடையவை. (கூட்டமைப்பின் சார்பில் கடந்த பொதுத் தேர்தலில் தெரிவான 16 எம்.பிக்களில் வியாழேந்திரன் அரசுக்கு எதிராக வாக்களித்தார். சிவசக்தி ஆனந்தன் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை).
அரசை ஆதரித்து நேற்று வாக்களித்த கூட்டமைப்பின் 14 எம்.பிக்களும் அதற்கு மாறாக – அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்களாயின் 106 – 105 என்ற கணக்கில் அரசு ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டு கவிழ்ந்திருக்கும்.
நாடாளுமன்றத்தில் கட்சிகளின் ஆசன எண்ணிக்கை தொடர்பான இந்த அட்சர கணிதக் கணக்கை வைத்துக்கொண்டே நேற்று வெற்றிகரமாக இராஜதந்திரக் காய்நகர்த்தல்களை முன்னெடுத்தார் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி.
கல்முனை வடக்கு பிரதேச செயலர் பிரிவுப் பிரச்சினை, கன்னியா வெந்நீரூற்றுச் சிக்கல், ஓமந்தை பிரதேச சபைப் பிரிப்புக் குழப்பம் ஆகியவற்றை முன் நிபந்தனையாக வைத்து நகர்வுகளை முன்னெடுத்தார் அவர்.
கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்றால் அதற்குத் தனியான நிதி அதிகாரம் வழங்க வேண்டும். நிதி அதிகாரத்தை வழங்கினாலும் அந்த அதிகாரத்தைச் சட்ட ரீதியாகப் பிரயோகிக்கக் கூடிய கணக்காளர் ஒருவர் அதற்கு நியமிக்கப்பட வேண்டும்.
சட்ட ரீதியான நிதி அதிகாரங்களைக் கையாளக் கூடிய ஒரு கணக்காளரை நியமிப்பதற்கான உத்தரவை உள்நாட்டலுவல்கள் அமைச்சு வழங்குவதானால், அதற்கு அந்தப் பிரதேச செயலகத்துக்கு முழுத்தகைமையுடைய ஒரு கணக்காளரை நியமிப்பதற்கான ஆளணி சட்ட ரீதியாக இருக்கவேண்டும்.
அத்தகைய பணி நிலை ஆளணியை நிதி அமைச்சின் ஆளணித் தீர்மானக் குழு அங்கீகரித்தால் மட்டுமே அப்படி ஒரு பணிநிலை இடம் சட்ட ரீதியாகும்.
வழமையாக இவ்வாறு ஒரு புதிய பதவிக்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சுப் பரிந்துரைத்து, அதற்கான பணி நிலை ஆளணிக்கு அங்கீகாரம் கேட்டால் நிதி அமைச்சின் உரிய குழு கூடி அந்த அங்கீகாரத்தை வழங்க மாதக் கணக்கில் நாள் எடுக்கும்.
அதனால்தான் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்தும் நடவடிக்கை மூன்று மாத காலத்துக்குள் செய்யப்படும் என முதலில் அரசுத் தரப்பினால் உறுதி கூறப்பட்டதாம்.
ஆனால், இந்த இழுபறிக்கு எல்லாம் நேற்றுக் கூட்டமைப்பு இடமளிக்கவேயில்லை.
நேற்று மாலை அரசின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னர் அந்தப் பணி நிலையை உறுதிப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படாவிட்டால் அரசை எதிர்த்துக் கூட்டமைப்பினர் 14 பேரும் வாக்களிப்பர் என்பது திட்டவட்டமாகவும், மிக உறுதியாகவும், உரத்த பாங்கிலும் பிரமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஏனைய ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் உரைத்தார் சுமந்திரன் எம்.பி.
அரசுக்கு வேறு வழியிருக்கவில்லை. ஓடி வந்தார் நிதி அமைச்சர் மங்கள சமரவீர. கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்துக்கு முழுத் தகைமையுடைய ஒரு கணக்காளர் பதவிக்கான பணி நிலையை அங்கீகரித்து, அதற்கு அனுமதியளிக்கும் – நிதி அமைச்சின் சம்பந்தப் பட்ட உயர்குழுவின் கடிதத்தின் பிரதியை நேற்று வாக்கெடுப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்னராக அவசர அவசரமாகவும் விழுந்தடித்துக் கொண்டும் எடுத்த வந்து சுமந்திரன் எம்.பியின் கைகளில் திணித்தார் நிதி அமைச்சர் மங்கள சமரவீர.
அதைப் பார்த்ததும், கூட்டமைப்பின் சக எம்.பிக்களுக்கு கண்ணசைவு வழங்கினார் சுமந்திரன் எம்.பி. ரணில் அரசுக்கு ஆதரவாக கூட்டமைப்பின் 14 பேரும் ஏகோபித்து வாக்களிக்க, அரசு தப்பிப்பிழைத்தது.
இந்த முடிவுக்கு கூட்டமைப்பினர் வர முன்னர் மேலும் பல சுவாரஸியங்கள் நடந்தன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்துவது தொடர்பாக சுமந்திரன் எம்.பியுடன் பிரதமர் ரணில் நேற்றுப் பகல்
விவாதித்துக்கொண்டிருக்க, அதற்கு எதிராகக் கெம்பிக் கொண்டிருந்த முஸ்லிம் பிரமுகர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஹரீஸ் எம்.பி. நாடாளுமன்றுக்குக் கூட்டி வந்து பிரதமரின் அலுவலகத்துக்குப் பக்கத்தில் இருந்த அறையில் அமர்த்தியிருந்தார்.
அவர்களிடம் போய் பேசும்படி சுமந்திரன் எம்.பியை விநயமாக வேண்டினார் ரணில். சுமந்திரனும் பக்கத்து அறைக்குப் போனார்.
எடுத்த எடுப்பிலேயே ஒரு போடு போட்டார். “நாங்கள் (கூட்டமைப்பு) முடிவு எடுத்து விட்டோம். அது தீர்க்கமான முடிவு. யாருக்காகவும் பார்த்திருப்பதில்லை.
இன்று வாக்கெடுப்புக்கு முன்னர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்துவது உறுதிப்படுத்தப்படாவிட்டால் அரசைக் கவிழ்ப்பது என்று தீர்மானித்து விட்டோம். இனி உங்கள் விருப்பப்படி நீங்கள் எதுவும் செய்யலாம். எங்களுக்குக் கவலையில்லை” – என்று சுமந்திரன் எம்.பி. போட்ட போடில் கலங்கிப் போயினர் முஸ்லிம் பிரமுகர்கள்.
இன்றைய நிலையில், ரணில் அரசு கவிழ்வதை நினைத்துப் பார்க்க அவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்த மாதிரி இருந்திருக்கும் போல. அவர்களும் டியூனை மாற்றத் தொடங்கினர்.
அவர்களுடன் பேசி விட்டு மீண்டும் பிரதமர் ரணிலிடம் வந்தார் சுமந்திரன் எம்.பி. “முஸ்லிம்களிடமும் கூறியாகிவிட்டது. அவர்களும் ஒப்புக்கொண்டு விட்டனர். இனி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்துவது தொடர்பான பந்து உங்கள் களத்தில். அதை நீங்கள் சரியான விதத்தில் விளையாடினால் எங்கள் ஆதரவு கிட்டும். இல்லையேல் ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்கொள்வீர்கள்” – என்று திட்டவட்டமாகவும் உறுதியாகவும் கூறினார் சுமந்திரன் எம்.பி.
பிறகென்ன மயங்கிப் போனார் பிரதமர் ரணில்…!
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையான நிர்வாக அதிகாரத்துடன் தரம் உயர்த்துவதற்கு எழுத்துமூலம் உத்தரவாதம் வழங்கினார் பிரதமர்.
அத்துடன், கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் விகாரை கட்டும் செயற்பாட்டை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை அரச அதிபருக்கு உத்தரவு பறந்தது.
ஓமந்தைப் பிரதேச செயலர் பிரிவைப் பிரிக்கும் விடயத்தில் பெரும்பான்மை இனத்தவருக்கு தனி அலகுப் பிரதேசம் கிட்டும் விதத்தில் நடக்கும் பிரிப்பு முயற்சியை நிறுத்துமாறு வவுனியா அரச அதிபருக்கும் பணிப்புரை விரைந்தது.
இவற்றின் பிரதிபலனாக ரணில் அரசு தப்பிப்பிழைத்தது.
இத்தகைய சூடான – இறுக்கமான – தந்திரோபாயமிக்க அணுகுமுறையை முன்னரே கூட்டமைப்பு கடைப்பிடித்திருந்தால் பற்பல காரியங்களை ஏற்கனவே சாதித்திருக்க முடியும் என்பது எனது கணிப்பீடு.
பற்பல சந்தர்ப்பங்களை முன்னர் தவறவிட்டு விட்டோம் என்பதுதான் வேதனையாகும்!