கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையின் பிரகாரமே இறுதித் தீர்மானம்.
அதுவரை கணக்காளர் அம்பாறை கச்சேரியில் இருந்து செயற்படுவார் என்றே பிரதமர் தெரிவித்திருந்தார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் தெரிவித்தார்.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு சகல அதிகாரங்கள் கொண்ட கணக்காளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல் தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அத்துடன் குறித்த பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சினைக்கு உறுதியான தீர்மானம் எடுக்கும்வரை எந்தவித நியமனங்களும் மேற்கொள்ளப்படாது என்றும் பிரதமர் எங்களிடம் தெரிவித்திருந்தார்.
கடந்த திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இடம்பெற்ற கூட்டங்களின்போது பிரதமர் இதனை தெரிவித்திருந்தார்.
அத்துடன் தீர்வு காணும்வரை கணக்காளர் அம்பாறை கச்சேரியில் இருந்து செயற்படுவார் என்றே தெரிவித்தார்.
ஆனால் தற்போது புதிய கணக்காளர் ஒருவர் உப பிரதேச செயலகத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதுதொடர்பில் எந்த விடயமும் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. அத்துடன் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தில் தமிழ், முஸ்லிம் என இரண்டு பிரிவுகள் செயற்பட்டுவருகின்றன.
அதேபோல் வடக்கு உப பிரதேச செயலகத்திலும் தமிழ், முஸ்லிம் பிரிவு அமைப்பதன் மூலம் இதற்கு தீர்வு காணலாம் என்றே நாங்கள் தெரிவிக்கின்றோம்.