முன்பெல்லால் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் பல கடைகள் விசாரித்து அதன் தரம் குறித்துக் கடைக்காரரிடம் கேட்டு அறிந்து அதன் பின்னர் வாங்கி நாமே ஒரு வண்டி ஏற்பாடு செய்து வீட்டிற்கு நம்முடைய பொறுப்பில் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.
ஆனால் தற்போதைய டிஜிட்டல் உலகில் கம்ப்யூட்டரை ஆன் செய்து நாம் வாங்க வேண்டிய பொருளின் தரம், விலை, ஒப்பீடு ஆகியவற்றைத் தெரிந்து கொண்டு ஆன்லைனிலேயே ஆர்டர் கொடுத்துவிட்டால் போதும், பொருள் நம்முடைய வீடு தேடி வந்துவிடும். பொருளுக்குரிய பணத்தையும் ஆன்லைனிலோ அல்லது பொருள் கொண்டு சேர்ப்பவர்களிடமோ கொடுத்து விடலாம்.
அந்த அளவுக்கு இது கஸ்டமர்களின் உலகமாக மாறிவிட்டது. ஆனால் அதே நேரத்தில் ஒரு பொருளை ஆன்லைனில் தேர்வு செய்துவிட்டு க்ளிக் செய்தவுடன் அந்தப் பொருள் உங்கள் வீட்டைத் தேடி வருவதற்குள் எத்தனை பிராசஸ் நடக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதையும் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஆன்லைன் பர்சேஸில் என்ன நடக்கின்றது?
நீங்கள் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று முடிவு செய்து Buy Now என்ற பட்டனை க்ளிக் செய்தவுடன் உடனடியாக உங்களது பின்கோட் நம்பர் சரிபார்க்கப்படுகிறது. பின்னர் அந்தப் பின்கோடு நம்பர் பகுதிக்கு அருகில் இருக்கும் நீங்கள் தேர்வு செய்த பொருளின் குடோனுக்கு அந்தத் தகவல் உடனடியாக அனுப்பப்படுகிறது.
உங்கள் ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்படுகிறது
நீங்கள் தேர்வு செய்த பொருளை குடோனில் உள்ள ஊழியர்கள் சரிபார்த்து, பின்னர் அதன் தரம் பார்த்து அந்தப் பொருளை பேக்கேஜிங் செக்சனுக்கு அனுப்புவார்கள். பாதுகாப்பான முறையில் பேக்கேஜ் செய்யப்பட்டவுடன் அந்தப் பொருள் டெலிவரி செக்சனுக்குச் செல்லும்.
டெலிவரி செக்சனில் என்ன நடக்கும்?
உங்கள் பொருள் பாதுகாப்பான முறையில் டெலிவரி செக்சனுக்குச் சென்ற பின்னர்ச் செண்ட்ரல் ஹப் என்று சொல்லக்கூடிய முக்கியப் பகுதியில் உள்ள உங்கள் ஏரியாவின் பின்கோட் நம்பருக்கு உரிய இடத்தில் வைக்கப்படும்.
சரிபார்க்கப்படும் முறை:
நீங்கள் கொடுத்த ஆர்டர்தான் பேக்கிங் செய்யப்பட்டுள்ளதா?, பேக்கிங் தரம் எப்படி ஆகியவற்றைச் சோதனை செய்து பின்னர் உங்கள் பின்கோட் நம்பர் முகவரிக்கு டெலிவரி செய்ய எது சரியான வழி என்பது குறித்து ஆராயப்படும்.
டெலிவரி செய்யும் முறை:
குடோனில் அனைத்து வித செக்கப்களும் முடிந்த பின்னர் டெலிவரி ஊழியரிடம் பொருள் ஒப்படைக்கப்படும். இதற்கென உருவாக்கப்பட்டுள்ள சாப்ட்வேர் உதவியால் குடோனில் இருந்து டெலிவரி செய்யப்படும் இடத்திற்குச் செல்வதற்கான சரியான பாதையைத் தேர்வு செய்து பாதுகாப்பாகப் பொருள் அனுப்பி வைக்கப்படும்.
பின்கோட் முறைப்படி அனுப்புதல்:
ஒவ்வொரு ஆர்டரும் எந்தப் பின்கோட் நம்பரில் இருந்து வந்துள்ளது என்பதை அறிந்து அவை ஒவ்வொன்றாக அனுப்பி வைக்கப்படும். அருகில் இருக்கும் பின்கோடு நம்பருக்குரிய பொருள் உடனுக்குடனும், தூரத்தில் உள்ள பின்கோடு நம்பருக்குரிய பொருள் ஒருசில கால அவகாசம் எடுத்தும் அனுப்பி வைக்கப்படும்.
எடைக்குத் தகுந்தவாறு பேக்கிங்:
ஆர்டர் வந்த ஒவ்வொரு பொருள் அதன் எடைக்குத் தகுந்த பாதுகாப்புடன் பேக் செய்யப்பட்டு அதற்குரிய ஷெல்ப்களில் வைக்கப்படும். இந்த ஷெல்ப்களில் பொருட்கள் வைக்கப்படும்போது ஆர்டர் வந்த தேதியின் வரிசைப்படி வைக்கப்படும். இந்தியாவில் இந்தப் பிராசஸ் அனைத்துமே ஆட்டமெட்டிக் முறையில் லோட் செய்வது, ஸ்கேன் செய்வது மற்றும் பேக்கிங் செய்வது ஆகியவை முறையாகச் செய்யப்படுகின்றது ஒவ்வொரு பொருளும் அதன் எடைக்கேற்ப கன்வேயர் பெல்ட் மூலம் அந்தந்த பின்கோடுக்குரிய இடத்திற்கு ஆட்டமெட்டிக்காகக் கொண்டு சேரும் வகையில் சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆர்டர் வந்த பொருள் சோதனை செய்யப்படுகிறது.
குடோனில் இருந்து ஆர்டர் வந்த பொருள் டெலிவரி செய்யப்படுவதற்கு முன்னர்க் கம்ப்யூட்டர் ஸ்கேனிங் மூலம் அனைத்து விபரங்களும் சரிபார்க்கப்படுகிறது. இதனால் அந்தந்த பொருள் உரியவர்களுக்கு மிகச்சரியாகப் போய்ச் சேரும். மேலும் டெலிவரி செய்வதற்கு முன்னர்த் தயாரிப்பு நிறுவனங்களின் பார்கோட் சரிபார்க்கப்பட ஸ்கேன் செய்யப்படுகிறது.
நீங்கள் ஆர்டர் கொடுத்த பொருள்தானா?
ஆன்லைனில் நீங்கள் ஆர்டர் அளித்தவுடன் உங்கள் ஆர்டரில் அந்தப் பொருளின் பார்கோடு ஆட்டமெட்டிக்காகப் பதிவு செய்யப்பட்டுவிடும். பின்னர் டெலிவரி செய்யும்போது ஸ்க்ரீனில் ஆர்டர் காப்பியில் உள்ள பார்கோடும், டெலிவரி செய்யப்படும் பொருளில் உள்ள பார்கோடும் சரியாக இருக்கின்றதா? என்று சோதனை செய்யப்படும். இரண்டும் சரியாக இருந்தால் மட்டுமே டெலிவரிக்கு அனுமதிக்கப்படும். எனவே நீங்கள் ஆர்டர் செய்த பொருள் மாறி வந்திருக்குமோ என்ற கவலையோ அல்லது அச்சமோ தேவையில்லை.
மேப்பிங் டெக்னாலஜி
ஆர்டர் செய்யும்போது நீங்கள் கொடுத்த முகவரி மற்றும் பின்கோடு நம்பர் மேப்பிங் டெக்னாலஜி மூலம் முதலில் சரிபார்க்கப்படுகிறது. உங்கள் முகவரி ஒருவேளை சரியானதாக இல்லையென்றால் மேப்பிங் டெக்னால்ஜி மூலம் கண்டுபிடிக்கப்படும். உதாரணமாகத் தெரு பெயரை மட்டும் நீங்கள் குறிப்பிட்டு ஏரியாவின் பெயரை குறிப்பிடவில்லை என்றால் மேப்பிங் டெக்னாலஜி மூலம் அது கண்டுபிடிக்கப்படும்,
ஒருவழியா உங்கள் பொருள் வந்துருச்சா?
மேற்கண்ட அனைத்து பிராசஸ்களும் ஒவ்வொன்றாக முடித்த பின்னர் நீங்கள் ஆர்டர் செய்த பொருள் உங்களைத் தேடி வரும். அதற்கென நியமனம் செய்யப்பட்ட டெலிவரி பாய் உங்களிடம் உரியப் பொருளை ஒப்படைப்பார். என்ன வாசகர்களே, ஒரு பொருளை ஆர்டர் செய்தால் அதை டெலிவரி செய்வதற்கு அதற்குப் பின்னால் இவ்வளவு பிராசஸ் இருக்கின்றது என்று ஆச்சரியப்படுகிறீர்களா?