காலி கடற்பரப்பில் பாகிஸ்தான் மற்றும் ஈரான் பிரஜைகள் இருவரினால் ஹெரோயின் கடத்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஈரான் பிரஜை விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கடத்தல்காரர்கள் பல சந்தர்ப்பங்களில் படகுடன் தொடர்பு கொண்டு, இலங்கைக்கு ஹெரோயினை கொண்டு செல்லுமாறு தகவல் வழங்கியதாக சந்தேகநபரான ஈரான் பிரஜை தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ஈரானியர்கள் ஒன்பது பேரும் நேற்று கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன் சந்தேகநபர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க நீதவான் அனுமதி வழங்கினார்.
கடந்த 10 ஆம் திகதி காலியில் இருந்து 100 கடல்மைல் தொலைவில் ஆழ்கடல் பகுதியில் வைத்து படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் 70 கிலோகிராம் நிறையுடைய 800 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் அதில் இருந்து கைப்பற்றப்பட்டது.
இதனிடையே, கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த படகுடன் ஈரானியர்கள் ஒன்பது பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.