கடந்த ஓராண்டு காலத்தில் உலகில் 821 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதியுறுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் இந்த தொகை 10 மில்லியன் அதிக எனவும் ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஒரு தசாப்த காலமாக குறைந்து வந்த அந்த எண்ணிக்கை, 2015 ஆம் ஆண்டில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும், பருவநிலை மாற்றமும், புதிதாக ஏற்பட்ட போர் சூழ்நிலைகளும் அதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
இதேவேளை உலகில் ஊட்டச் சத்துப் பற்றாக்குறையால் சுமார் 149 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்று தெரிவித்தது.
அத்துடன் உலகின் பல பகுதிகளிலும் உடற்பருமனாலும், கூடுதல் எடையாலும் எல்லா வயதுப் பிரிவினரும் பாதிக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் 2030 ஆம் ஆண்டுக்குள் யாருமே பசியால் அவதிப்படக்கூடாது எனும் இலக்கை எட்டுவது சிரமமான விடயம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை அச்சம் வெளியிட்டுள்ளது.
அத்துடன் பசியையும், உணவுப் பொருள் மீதான கட்டுப்பாட்டையும் ஆயுதமாகப் பயன்படுத்தி, பயங்கரவாதக் குழுக்கள் சமூகங்களைப் பிளவுபடுத்துவதாக அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
இதேவேளை உணவுப் பாதுகாப்பு இல்லாமல், ஒருபோதும் அமைதியும் நிலைத்தன்மையும் சாத்தியப்படுத்த முடியாது என ஐ.நா, அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.