பிரபல இளம் ஜோதிடர் பாலாஜி ஹாசனிடம், தன் கணவர் ஸ்டாலின், தமிழக முதல்வராகும் வாய்ப்பு உள்ளதா என, துர்கா, ஜோதிட ஆலோசனை கேட்ட தகவல் வெளியாகி உள்ளது.
சேலத்தை சேர்ந்த பிரபல இளம் ஜோதிடர் பாலாஜி ஹாசன். இவர், உலகளவில் நடந்த ஜோதிடர்கள் மாநாட்டில் பங்கேற்று பல பரிசுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளார்.
கடந்த ஓராண்டாக, பல விஷயங்களில், இவர் கூறும் கணிப்புகள் அனைத்தும் சரியாக இருப்பதால் ஜோதிட பிரியர்களை பெரிதும் கவர்ந்துள்ளார். பெரும்பாலான கணிப்புகள் பலித்து உள்ளதால் ஜோதிட துறையில், மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளார்.
குறிப்பாக, ‘ஆந்திராவில்,தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை தோற்கடித்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வர் பதவி ஏற்பார்’ என பாலாஜி ஹாசன் கணித்தது அப்படியே பலித்தது. ‘பிரதமர் மோடி தான் மீண்டும் பிரதமராவார்’ என அவர் கணித்ததும் உண்மையானது. அதே போல், தமிழகத்தில்லோக்சபா தேர்தலில், தி.மு.க நிறைய இடங்களைக் கைப்பற்றும் எனக் கூறியிருந்தார்; அதுவும்பலித்தது.
இந்நிலையில், ஜோதிடம் பார்ப்பதையும், கோவில்களுக்கு செல்வதையும் வழக்கமாக வைத்துள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா, சமீபத்தில் பாலாஜி ஹாசனை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்து வந்து ஜோதிட ஆலோசனை கேட்டு உள்ளார். குடும்பத்தினரின் ஜாதகங்களை கொடுத்து, சாதக, பாதக அம்சங்களை கணித்து சொல்லும்படி கேட்டுள்ளார்.
அப்போது, ஜாதக பலன்படி தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்பார் என பாலாஜி ஹாசன் கணித்து கூறியதால், துர்கா மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.