வேதத்தின் கண் ஜோதிடம். அந்தக் கண்போன்ற ஜோதிடத்தின் நான்காவது ராசி கடகம். தமிழ் மாதங்களில் ஆடி மாத துவக்கம் இந்த கடகராசியில்தான் ஆரம்பமாகிறது. கடகராசியின் அதிபதி வானத்து ராஜா என்று வர்ணிக்கப்படுகிற சந்திர பகவான். பஞ்சபூத தத்துவங்களில் நீரைக் குறிக்கும் ராசி இது. பாலின வரிசையில் பெண்ராசி. இராமாயண காவியத்தின் கதாநாயகனான ஸ்ரீராமன் பிறந்த ராசி இது.
இந்த ராசியில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பு மிக்கவர்கள். விட்டுக் கொடுத்துப்போனாலும், எடுத்த காரியத்தை விடாமுயற்சியுடன் செய்து முடிப்பார்கள். லட்சியவாதிகள். அனைவரிடமும் அன்பாகவும் சகஜமாகவும் பழகும் தன்மை கொண்டவர்கள். இரக்கச் சுபாவம் நிறைந்தவர்கள். ஆனால் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். சுகம், துக்கம், அனுதாபம், கோபம், பொறாமை, வெகுளித்தனம் போன்ற குணங்கள் இருந்தாலும் நீண்ட நாள் தங்காது. ஞாபக சக்தி அதிகம் இருப்பதால், மறந்து போன பழைய சம்பவங்களையும் அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வருகிற குணம் இருக்கும்.
பிறர் விருப்பத்திற்கு மதிப்புக் கொடுத்தாலும் தங்கள் கருத்துக்களை கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக வெளியிடுவார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றக்கூடியவர்கள். கடின உழைப்பை விட சொகுசான வாழ்க்கையே பிடிக்கும். பொதுவாகக் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு நோய் நொடிகள் சீக்கிரம் பீடிக்கும். எந்த நோய் ஏற்பட்டாலும் மருத்துவ சிகிச்சை இல்லாமல் தீராது. இருப்பினும் நோய் சிறியதாக இருந்தாலும் இவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம் பெரிதாக இருக்கும்.
விருச்சிகம், மீனம், மேஷம், மகர ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கைத் துணையாக அமைவதும், தொழில்முறை கூட்டாளியாக அமைவதும் சிறப்பு. மாறாக வேறு ராசிகளில் அமைந்தால் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தலை தூக்கும். கடவுள் வழிபாட்டைப் பொருத்தவரை வெளிப்படையாக இல்லாமல் அந்தரங்கமாக அதிகம் பக்தி கொண்டவர்களாக இருப்பார்கள். 5, 14, 16, 18, 20, 25, 40 வயதுகளில் நோய் கண்டங்கள் ஏற்படும். இதிலிருந்து விடுபட்டால் தொன்னூறு வயதுவரை வாழ்வார்கள் என்பது சாஸ்திர சான்று.
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு ஆடிமாதம் சூன்ய மாதமாகும். அதனால் ஆடி மாதத்தில் இந்த ராசியினர் சுப காரியங்கள் செய்வதோ, சுப காரிய முயற்சியில் ஈடுபடுவதையோ தவிர்க்க வேண்டும்.
இவர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் – திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி
ஆகாத நாள் – சனி
மத்திம நாள் – புதன், ஞாயிறு
ராசியான நிறம் – வெள்ளை, சிவப்பு, சந்தனகலர்
ஆகாத நிறம் – கருப்பு
ரத்தின கற்கள் – கனக புஷ்பராகம்,முத்து
ராசியின் நிறம்- வெள்ளை
ராசியில் உள்ள நட்சத்திரங்கள் – புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4.