இந்த அவசர யுகத்தில் ‘டேட்டிங்’ பரவலாகி விட்டது. ‘அண்ணலும் நோக்கினாள்; அவளும் நோக்கினாள்’ பாணியில் ஒரே ஒரு பார்வையில், சேர்ந்து காஃபி அருந்தும் சில நிமிட நேரத்துக்குள், ‘உனக்குள் என்னை கண்டுகொண்டேன்’ என்று தங்களுக்கு பொருத்தமான இணையை புரிந்து கொள்ள ‘டேட்டிங்’ வழி செய்கிறது.
“எங்கே போகலாம்?” “என்ன செய்யலாம்?” “என்ன டிரஸ் அணிந்து கொள்ளலாம்?” “என்ன நடக்கும்?” என்ற பல கேள்விகளை ‘டேட்டிங்’ ஆண்கள் முன் அள்ளி வீசுகிறது. இந்தக் கேள்விகளுக்கான பதில்களை பார்ப்போம்.
பந்தா வேண்டாம்
‘டேட்டிங்’கின்போது நீங்கள் நீங்களாகவே இருங்கள். பந்தா செய்கிறீர்கள் என்று பெண் நினைத்துவிட்டால், அதோ கதிதான்! அதேபோல், பதற்றமாகவும் இருக்கக்கூடாது. நிதானமாக, இயல்பாகவே இருங்கள். அப்போதுதான், அஸ்திபாரம் உறுதியாக அமையும். முதல் நாளில் உங்களைக் குறித்து நல்ல எண்ணம் பெண்ணுக்கு வந்து விட்டால், உறவை கட்டி எழுப்புவது எளிதாகி விடும்.
நன்றாக டிரஸ் செய்யுங்கள்
நிதானமாக இருக்கிறேன் என்று கசங்கிய ஜீன்ஸையும், சாயம்போன டி ஷர்ட்டையும் போட்டுக்கொண்டு போய் நிற்காதீர்கள். முதல் தோற்றமே உங்களைப் பற்றிய உயர்வான எண்ணத்தை கொடுக்க வேண்டும். எந்த நேரத்தில் சந்திக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, டிரஸை தேர்ந்தெடுங்கள். மதிய உணவு நேரமாக இருந்தால், நேர்த்தியான ஃபோர்மல் டிரஸ் அணிந்து கொள்ளுங்கள். அதுவே மாலை பொழுதாக இருந்தால், கஷூவல் டிரஸை தேர்ந்தெடுக்கலாம். அதற்காக கன்னாபின்னாவென்று டிரஸ் செய்யாமல், நல்ல தரமான பாண்ட், டி ஷர்ட் அணிந்து கொள்ளுங்கள்.
பழக்கமான இடத்தில் சந்தியுங்கள்
சந்திக்கும் இடத்தை நீங்கள் தீர்மானித்தால் நல்லது. அது சூழ்நிலையை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவும். பழக்கமான இடமென்றால், இயல்பாக இருப்பது எளிதாக இருக்கும். பெரும்பாலும், நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்கும் ஆணையே பெண்கள் தேடுவர். பழகிய இடம் தேவையில்லாத பதற்றத்தை தவிர்க்கும்.
தன்னம்பிக்கையே கை கொடுக்கும்
ஆண்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை கண்டு கொள்வது பெண்களுக்கு பிடித்த விஷயம். ‘டேட்டிங்’ போய் விட்டு, தொடை நடுங்கிக் கொண்டிருந்தால், கண்டிப்பாக ரெட் சிக்னல் தான். உங்களுக்கு உற்சாகத்தை தரக்கூடிய விஷயங்களையே பேசுங்கள். தன்னைப் பற்றி அறிந்து கொள்வதில் நீங்கள் கரிசனையாக இருக்கிறீர்கள் என்று பெண் உணர்ந்து விட்டால் போதும், சுபம்தான்!
மனம் விட்டு பேசுவதற்கு வழி செய்யுங்கள்
பெண் பேசுவதை காது கொடுத்து கேட்பதுடன், தன்னைப் பற்றி அவள் அதிகம் கூறுவதற்கான வாய்ப்பினை அமைத்து கொடுங்கள். தன் மனதுள் இருப்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ளும்படி, பேச்சினை நயமாக திருப்பிச் செல்லுங்கள். சகஜமான உரையாடல், நிச்சயம் அவள் மனதில் உங்களுக்கு இடம் பிடித்து தரும்.
கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்
பெண்கள், நடத்தை மற்றும் அணுகுமுறையை கொண்டே ஆண்களை மதிப்பிடுகிறார்கள். ஆகவே, முதல்முறையிலே மனதில் கௌரவமான இடத்தை பெறும்படி நடந்து கொள்ளுங்கள். அடுத்தடுத்த சந்திப்புகளின் போது, தோழிக்காக கதவு திறந்து விடுதல், நாற்காலியை இழுத்து போடுதல் ஆகியவற்றை செய்யவும் தயாராக இருங்கள். இது பழைய பாணியாக தெரியலாம். ஆனால், பெண்ணின் மனதில் இடம்பிடிக்க இதெல்லாம் அவசியம்.
வெகுமதி கொடுக்க மறவாதீர்கள்
பெண்களை பரவசப்படுத்துவதில் வெகுமதிக்கு முக்கிய இடம் உண்டு. பெண் ‘டேட்டிங்’கிற்காக மிகவும் சிரத்தையெடுத்து தயாராகி வருவாள். அவ்வளவு பிரயாசப்பட்டு வந்த இடத்தில் வெகுமதி கிடைக்கவில்லையென்றால் ஏமாந்து போய் விடுவார்கள். ஆகவே, ‘டேட்டிங்’கின்போது மறவாமல் வெகுமதி கொடுங்கள்.
லட்சியம் பேசக்கூடாது
பொதுவாக, “நான் எதிர்காலத்தில் அப்படி ஆவேன், இப்படி ஆவேன்… அதைச் செய்வேன்… இதைச் செய்வேன்” என்று பேசுவது பையன்களின் வழக்கம். ஆனால், பெரும்பாலும் பெண்கள் அதை கேட்க விரும்புவதில்லை. அதிலும் முதல் டேட்டிங் தினத்தன்று கண்டிப்பாக எதிர்கால லட்சியம் பற்றி உளறி வைக்காதீர்கள். நன்கு பழகி நெருக்கமான பிறகு உங்கள் லட்சிய உலகை நீங்கள் திறந்து காட்டலாம். முதன்முதலாக ‘டேட்டிங்’ செல்லும்போது அடிப்படையாக தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள் இவை. நீங்கள் யார் என்று தெளிவாக காட்டி உங்களைப் பற்றி பொஸிட்டிவ் எண்ணத்தை விதைக்க வேண்டிய நாள் பெர்ஸ்ட் டேட்டிங்!
இதை விட அதிகமாகவோ, குறைவாகவோ செய்து விடாதீர்கள்… கச்சிதமாக செய்து கலக்குங்க பாஸ்!