மஹோவிலிருந்து ஓமந்தை வரையான புகையிரத பாதையை மேம்படுத்தும் புதிய ஒப்பந்தம் இன்று (18) கைச்சாத்தானது. இந்தியாவின் IRCON நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்குமிடையில் இன்று இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது.
91.26 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மஹோ முதல் ஓமந்தை வரையிலான 130 கிலோமீற்றர் நீளமாக புகையிரதப்பாதை இந்தியாவின் இந்திய சலுகை நிதியில் மேம்படுத்தப்படும்.
7 புகையிரத தரிப்பிடங்கள், 12 உப தரிப்பிடங்கள், 78 புகையிரத கடவைகள் இந்த திட்டத்தில் புனரமைக்கப்படும்.
சுமார் 100 வருடங்களின் பின்னர் இந்த பாதை புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது மணித்தியாலத்திற்கு 60 தொடக்கம் 120 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்யும் புகையிரதங்கள், இரண்டு மடங்கு வேகத்தில் பயணிக்குமென தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் 318 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான புகையிரத கட்டமைப்பை மேம்படுத்தும் ஒப்பந்தத்தை இந்தியா ஜூன் 2017 இல் கையெழுத்திட்டது. இந்த திட்டத்தின் கீழ், 160 பயிற்சியாளர்களை வரவழைக்கும் நடவடிக்கையும் அடங்கும். மஹோவிலிருந்து அனுராதபுரத்திற்கு சமிக்ஞை மற்றும் தொலைதொடர்பு முறையை மேம்படுத்துதல், மற்றும் இரத்மலனாவில் ஒரு புகையிரத திருத்தும் நிலையம் அமைத்தல் என்பனவும் உள்ளடங்கும்.
ஒப்பந்த ஒப்பந்தத்தில் IRCON இன்டர்நஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. சுனில் குமார் சவுத்ரி மற்றும் இலங்கையின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் திரு. எல்.பி.ஜெயம்பதி ஆகியோர் போக்குவரத்து மற்றும் சிவில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க முன்னிலையில் கையெழுத்திட்டனர்.