‘காதல்’ இந்த வார்த்தையை கேட்டதுமே ஓர் இனம்புரியாத சிலிர்ப்பு உள்ளத்தில் ஏற்படும். அதுவும், பார்த்த மாத்திரத்திலே காதல் என்றால் பரவசம்தான்! ‘அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்’ என்ற பாணி காதல் துடிப்பானது.
தைவான் நாட்டில் பிரபலமான சமூக ஊடக கருத்து பரிமாற்றதளம் டிகார்டு (Dcard). ‘நம் கனவு கன்னியை கரம்பிடிக்க பொறுமை காக்க வேண்டும்’ என்று தலைப்பிட்டு, தம் காதல் கதையை இத்தளத்தில் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
கதாநாயகனின் வீட்டின் அருகே 7-லெவன் என்று ஒரு கடை உள்ளது. அதில் ஓர் இளம்பெண் பணிபுரிந்து வந்துள்ளார். அந்தப் பெண்ணை பார்த்ததும் நம் ஹீரோவுக்குள் காதல் தீ பற்றிக் கொண்டது.
அந்த இளம்பெண்ணிடம், “ஐ லவ் யூ” என்று சொல்வதற்கு வெட்கப்பட்டார் ஹீரோ. சரி, பிறகு எப்படித்தான் மனங்கவர்ந்தவளை அணுகுவது? என்று யோசித்தவருக்கு ஒரு ஐடியா கிடைத்தது. அதன்படி, அந்தப் பெண் பணிபுரிந்த கடைக்குச் சென்று தினமும் காஃபி குடிக்கலாம் என்று தீர்மானித்தார்
வெறுமனே காஃபி வாங்கினால், பல வாடிக்கையாளர்களுள் ஒருவனாக போய்விடுவோமோ என்ற தயக்கம் வந்தது. கடைக்குச் சென்று காஃபி கேட்டார். அந்தப் பெண், காஃபி கொடுக்க வந்தபோது, “அஞ்சு ஸ்பூன் சர்க்கரை போடுங்க” என்றார். “அஞ்சு ஸ்பூனா? ரொம்ப ஸ்வீட்டாயிருமே!” அந்தப் பெண் கூறியதற்கு, “உங்க அளவுக்கு ஸ்வீட்டாகாது…” என்று பதில் கூறினார் ஹீரோ. அந்தப் பெண்ணின் முகத்தில் வெட்கப் புன்னகை தவழ்ந்தது. ஹீரோ, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு காஃபியோடு வெளியேறினார். அன்றிலிருந்து தினமும் கடைக்குச் செல்வதும், ஐந்து கரண்டி சர்க்கரை போட்டு காஃபி குடிப்பதும் தொடர்ந்தது.
தன்னுடைய பதிவில் இறுதி வரியில், “இரண்டு ஆண்டுகள் கடந்தன. எனக்கு சர்க்கரை வியாதி வந்துவிட்டது” என்று எழுதியிருந்தார்.
அவரது பதிவை வாசித்த நெட்டிசன்கள் அத்தனைபேருமே காதல், கல்யாணத்தில் தான் முடிந்திருக்கும் என்ற எதிர்பார்ப்போடு இருந்ததால், கடைசி வரி அவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. யாரும் எதிர்பாராத முடிவை அவர் எழுதியிருந்தார். கனவு கன்னி அவருக்குச் சொந்தமானாளா என்பதை அவர் சொல்லாமலே விட்டுவிட்டார்.