கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டரீதியற்ற மணல் அகழ்வுகளுக்கு பொலிஸார் முழுமையாக துணை போவதாக கிராம மட்ட அமைப்புக்கள் மாவட்ட பொது அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் இயற்கை வளமான மணல் வளம் அண்மைக்காலமாக வகை தொகையின்றி அழிக்கப்பட்டு வருகின்றன என்றும் இதனை தடுப்பதற்கு இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்ட பொதுஅமைப்புக்கள் இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் அதற்கு திரைமறைவில் துணை போவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளன.
அதாவது, மணலுக்கான எந்தவிதமான அனுமதிகளும் வழங்கப்படாத வன்னேரிக்குளத்தின் உட்பகுதி கல்லாறு உமையாள்புரம் தட்டுவன்கொட்டி கிளை ஊரியான் கோரக்கன்கட்டு அக்கராயன் பன்னங்கண்டி போன்ற பகுதிகளில் தினமும் ஐம்பதிற்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்களில் மணல் அகழ்தெடுக்கப்பட்டு வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
குறிப்பாக, கண்டாவளைப்பிரதேசத்திற்குட்பட்ட கல்லாறு பெரியகுளம் ஊரியான் போன்ற பகுதிகளில் வயல் நிலங்களிலும் ஆறுகளிலும் அனுமதியற்ற முறையில் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுதொடர்பாக பொலிஸாருக்கும் பொலிஸ் உயரதிகாரிகளுக்கு பலதடவைகள் எடுத்துக்கூறியும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் கண்டாவளைப்பிரதேச பொதுஅமைப்பக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
கடந்த 11ஆம் திகதி கண்டவாளைப்பிரதேச செயலர்பிரிவிற்கு உட்பட்ட கனகராயன் ஆற்றுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிராத மணல் அகழ்வு கிராம அலுவலர் உத்தியோகத்தர்கள் சென்று மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றினையும் அங்கு குவிக்கப்பட்டிருந்த 50 கியுப்பிற்கும் அதிக மணலையும் விடேச அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்தபோதும் தற்போது அப்பகுதியில் இன்றும் மணல் மணல் அகழ்வுகள் தொடர்வதாகவும் இதற்கு பொலிஸார் முழுமையான ஆதரவு வழங்கி வருவதாகவும் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.