இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் திகதி ஈஸ்டர் தினத்தன்று ஐ.எஸ். ஆதரவு தீவிரவாதிகள் 9 இடங்களில் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். இதில் கேரளா, தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இதனை அடுத்து, தேசிய புலனாய்வு நிறுவன முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 2 மாதங்களில் கேரளா மற்றும் தமிழகத்தில் பல இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனைகளை நடத்தினர். கடந்த வாரம் சென்னை மண்ணடியில் உள்ள இஸ்லாமிய அமைப்பு ஒன்றில் சோதனை நடத்தப்பட்டது.
மேலும், தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 14 பேர் துபாயில் தங்கியிருந்த நிலையில், அவர்கள் அந்நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு டெல்லியில் என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, நாகபட்டினத்தில் இருவர் கைது செய்யப்பட்டு 16 நபர்களும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து, சென்னை, இராமநாதபுரம், மயிலாடுதுறை, நெல்லை மேலப்பாளையம், மதுரை, ஆகிய பல இடங்களில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 15ம் திகதி டெல்லியில் அன்சார்உல்லா தீவிரவாத அமைப்பை சேர்ந்த 14 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்ததில் கீழக்கரையைச் சேர்ந்த ரபி அகமது, வாலிநோக்கத்தை சேர்ந்த பாரூக், ராமநாதபுரத்தைச் சேர்ந்த முண்டாசீர் மற்றும் பைசல்ஷெரீப் ஆகிய நால்வரும் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இந்த நான்கு பேரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தொடர்பு உள்ளதா என இன்று காலை விசாரித்தனர்.
மேலும், உள்துறை அமைச்சகம் தடைசெய்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தோர் ஊடுருவி உள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரித்தனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரின் பின்புலம், பண பரிவர்த்தனைகள் குறித்து விசாரித்ததாக தெரிய வந்துள்ளது. தலா 5 பேர் வீதம் 20 பேர் கொண்ட குழுவினர் விசாரணையை நிறைவு செய்தனர்.
இந்த நால்வரது பெயரில் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் தேசவிரோத வழக்குகள் பதிவாகி உள்ளதா எனவும் பொலிஸ் தரப்பில் விசாரணை நடத்தியுள்ளனர்.
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய புகாரில், நெல்லை மேலப்பாளையம் பகுதியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமதுஇப்ராஹிம் வீட்டில் இன்று காலை கேரள மாநிலம் கொச்சின் பகுதியில் இருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குழு சுமார் 3 மணிநேரம் சோதனை மேற்கொண்டனர்.
இங்கு சோதனையை முடித்த அதிகாரிகள் அடுத்த தெருவில் உள்ள முகமது இப்ராஹிம் மனைவி செய்யதலி வீட்டிலும் சுமார் ஒரு மணிநேரம் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் செல்போன், உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி சென்றுள்ளனர். இந்த சோதனை காரணமாக அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.