சில விஷயங்களை பகிரங்கமாக பேசி இரகசியமாக செய்யவேண்டும். சில விடயங்களை இரகசியமாக பேசி பகிரங்கமாக செய்யவேண்டும் என அமைச்சா் மனோ கணேசன், கூறியுள்ளார்.
இல்லாத பொல்லாத பொய்களை எல்லாம் கூறி முஸ்லிம் சமூகத்தை சிக்கலில் ஹிஸ்புல்லா மாட்டிவிட்டதாகவும் அமைச்சா் மனோகணேசன் காட்டமாக கூறியுள்ளாா்.
முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் இல்லாமல் எவராலும் ஜனாதிபதி ஆசனத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என மட்டக்களப்பில் ஹிஸ்புல்லா கூறியது தொடர்பாக மனோகணேசனிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எந்த விடயங்களை எங்கு பேசவேண்டும் என சரியாக தீர்மானிப்பவனே பொறுப்புள்ள அரசியல்வாதி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை போன்ற ஒரு பல்லின நாட்டில், சுய பிரபல்யத்திற்காக நாவடக்கமின்றி பேசுவோர் தமது இனத்தை ஆபத்தில் தள்ளுகிறார்கள் என தான் பொதுப்படையாக பதில் சொன்னதாகவும், ஏற்கனவே இல்லாத பொய்களை எல்லாம் சோடித்து சாமானிய முஸ்லிம் மக்களை, ஹிஸ்புல்லா போன்றோரின் கருத்துக்களால் சந்தேக வலயத்தில் தள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனோகணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.