மருத்துவக் கழிவுகளையோ, நச்சுக்கழிவுகளையோ இலங்கைக்கு இறக்குமதி செய்யவில்லையென தெரிவித்துள்ளது ஹேலிஸ் சீசோன் நிறுவனம். இதன் நிர்வாக இயக்குனர் ருவன் வைத்தியரத்ன மற்றும் இயக்குநர்கள் அசங்கா ரத்நாயக்க மற்றும் அமல் ரோட்ரிகோ ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தனர்.
“இலங்கைக்கு குப்பை இறக்குமதி செய்யப்படுகிறது என்ற அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஹேலிஸ் மறுக்கிறது. எமது நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் நச்சுக் கழிவுகள் அல்லது பிற கழிவுகள் இல்லை“ என்று ருவன் வைத்தியரத்ன கூறினார்.
தமது கொள்கலன்களில் உள்ள மெத்தைகள் பதப்படுத்தப்பட்டு மீண்டும் தனது சொந்த செலவில் ஏற்றுமதி செய்யப்படும் என்றார்.
மறு ஏற்றுமதி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் 2013 ஆம் ஆண்டின் சட்ட எண் 1 இன் கீழ் ஹேலிஸ் சீசோன் நிறுவப்பட்டது. இந்த கொள்கலன்களை சரக்கு நிறுவனமான ELT துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ளது. சிலோன் மெட்டல் ப்ரசசிங் கோர்ப்பரேஷனுக்குச் சொந்தமான பயன்படுத்தப்பட்ட மெத்தைகளை பதப்படுத்துவதற்கும் மறு ஏற்றுமதி செய்வதற்கும் சுமார் 130 கொள்கலன்கள் ஹேலீஸ் ஃப்ரீ சோனின் களஞ்சியத்தில் சேமிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
கொள்கலன்களில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எதுவும் இல்லை என்று ஆவணங்கள் உறுதிப்படுத்திய பின்னர் சேமிக்க அனுமதிக்கப்பட்டது.
ஏற்கனவே ஒப்புக் கொண்ட 130 கொள்கலன்களில் 29 மறு செயலாக்கம் செய்யப்பட்டுள்ளன. எங்கள் களஞ்சியத்தில் உள்ள கொள்கலன்களில் மருத்துவமனை கழிவுகள் இல்லை. இதில் பயன்படுத்தப்படும் மெத்தை, தரைவிரிப்புகள் மற்றும் கடற்பாசிகள் மட்டுமே உள்ளன.
கொழும்பு துறைமுகத்தில் 102 கொள்கலன்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. இந்த கொள்கலன்களுடன் ஹேலிஸிற்கு எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் அந்த கொள்கலன்களின் இறக்குமதியாளர், பாதுகாவலர் அல்லது சேமிப்பு வழங்குநர் அல்ல.
எங்கள் நிறுவனம் ஒரு சமூக பொறுப்புள்ள நிறுவனம், இது நெறிமுறைகளையும் அதிகபட்ச பாதுகாப்பையும் பாதுகாக்கிறது என்றார்.