பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50ரூபாயைக் கொடுக்க முடியாது என்று கூறும் அமைச்சர் நவீன் திசாநாயக்க, அவ்வாறு கொடுத்தால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யப் போவதாக கூறியுள்ளார். அவர் இராஜினாமா செய்வதால் எதுவும் நடக்காது. ஆனால் நாங்கள் இராஜினாமா செய்தால் இந்த அரசாங்கமே இருக்காது. அதே நேரம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு திறைசேரியில் இருந்து ஆறரை மில்லியன் ரூபாவை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராம உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பழநி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
ரன் மாவத் வேலைத்திட்டத்தின் ஊடாக தலவாக்கலை கிரேட் வெஸ்டன் தோட்டத்துதின் ஊடாக செல்லும் 4.5 கிலோமீட்டர் பிரதான போக்குவரத்து பாதை கொங்கிரீட் இடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் திகாம்பரம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் அரசியலுக்கு வந்து பொய் பேசவில்லை. உண்மையான சேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். தேர்தல் காலத்தில் கிரேட் வெஸ்டன் தோட்ட பாதையைத் கார்ப்பெட் போட்டு செப்பனிட வாக்குறுதி அளித்திருந்தேன். அதேபோல செய்து கொடுத்துள்ளேன். மேலும் எமது மக்களுக்கு 7 பேர்ச் காணியில் தனி வீடுகள், அவற்றுக்கான காணி உறுதிப்பத்திரங்கள், பிரதேச சபைகளை நுவரெலியா மாவட்டத்தில் அதிகரித்தல், பிரதேச செயலகங்களை உருவாக்குதல், மலையக அபிவிருத்திக்கென தனியான அதிகார சபை என வாக்குறுதி அளித்த அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றி வருகிறேன்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்த சம்பள உயர்வுக்கு மேலதிகமாக நாளொன்றுக்கு 50 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவையின் இணக்கம் காணப்பட்டது. அதை பெற்றுக் கொடுப்பதாக கூறிய அமைச்சர் நவீன் திஸாநாயக்க, இப்போது வழங்க முடியாது என்று கூறுகிறார். அதை கொடுக்க கூடாது என்று அமைச்சர் நவீன் திசாநாயக்க, இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் கங்கணம் கட்டிக்கொண்டு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்.
ஆனால் உடனடியாக திறைசேரியில் இருந்து ஆறரை மில்லியன் ரூபாவை பெற்றுக் கொடுக்கும் படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார். இன்னும் ஒரு மாத காலத்தில் இந்த 50 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்று கொடுத்தே தீருவேன். வீடு, காணி, பிரதேசசபை முதலானவற்றை பெற்றுக் கொடுத்துள்ள நான், இந்த ஐம்பது ரூபா மேலதிக கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க மாட்டேனா?
இவ்வாறு 50 ரூபாய் கிடைக்காவிட்டால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்களின் ஆதரவு இந்த அரசாங்கத்திற்கு நிச்சயம் கிடைக்காது என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறேன்.
அண்மை காலமாக நமது தொழிற்சங்கங்கத்துக்கு அங்கத்துவ பெருக்கம் அதிகரித்து வருகின்றது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், தோட்ட முகாமையாளர் களுக்கு உணவு முதலான இத்யாதிகளுடன் விருந்துகளைப் படைத்து வருவதாகவும் அறிகின்றேன்.
எனக்கு செய்ய முடியாததை எனது பாட்டன் பூட்டன் பெயரில் போட்டு தப்பித்துக் கொள்ளவோ அல்லது திருந்தி விட்டதாக கூறி நாடகமாடவோ முயல மாட்டேன். அவ்வாறு கூறி மக்கள் மத்தியில் வாக்கு கேட்கவும் மாட்டேன்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் மேலதிகமாக சம்பளத்தை வழங்கினால் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க கூறியுள்ளார். அவர் இராஜினாமா செய்தால் எதுவும் நடக்காது. ஆனால் நாங்கள் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தால் இந்த அரசாங்கமே இருக்காது என்பதை சொல்லத் தேவையில்லை.
தொழிலாளர்கள் நம்பிக்கையுடன் இருங்கள். இன்னும் ஒரு மாத காலத்தில் 50 ரூபா மேலதிக கொடுப்பனவு நிச்சயம் கிடைக்கும். அரசியல் ரீதியில் நாம் நமது மத்தியில் உள்ள கருத்து முரண்பாடுகளை மறந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் .அந்த ஒற்றுமையும் கட்டுக்கோப்புமே எமக்கு மரியாதையையும் மதிப்பையும் ஏற்படுத்தும் என்பதையும் மறந்துவிடக் கூடாது என்றார்.