இந்தியா ஏ அணியில் அபாரமாக ஆடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் என்ற இளம் வீரரை இந்திய அணியில் கட்டாயம் எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த 22 வயதான ருதுராஜ் கெய்க்வாட், 2016 ஆம் ஆண்டு முதல் மகாராஷ்டிரா அணிக்காக ரஞ்சிக்கோப்பை மற்றும் டி20 போட்டிகளில் ஆடி வருகிறார்.
அதேநேரம், இந்தியா ஏ அணியிலும் தொடர்ந்து இடம் பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 20 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டார்.
துவக்க வீரரான இவருக்கு அனுபவம் இன்மை காரணமாக ஒரு போட்டியில் கூட வாய்ப்பு அளிக்கவில்லை.
இந்நிலையில், இந்திய ஏ அணியில் இலங்கை ஏ மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஏ அணிகளுக்கு எதிரான தொடரில் இடம் பெற்று அபாரமான ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறார். கடைசி 8 இந்தியா ஏ போட்டிகளில் இவர் அடித்த ரன்களின் விவரங்கள்.
187* (136), 125* (94), 84 (59), 74 (73), 3 (10), 85 (102), 20 (17), 99 (89)
இவர் கடைசி 8 ஆட்டங்களில் 677 ரன்கள் குவித்து, 112.83 ரன்களை சராசரியாக கொண்டுள்ளார். குறிப்பாக, இவரது ஸ்ட்ரைக் ரேட் 115 க்கும் மேல்.
தற்போதைய இந்திய அணியில் துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இருவரின் இடத்தை பிடிக்க கேஎல் ராகுல், அஜிங்கிய ரஹானே போன்ற அனுபவம் மிக்க வீரர்கள் போராடி வருகின்றனர்.
இவர்கள் மட்டுமல்லாது, மயங்க் அகர்வால், பிரிதிவி ஷா இருவரும் தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில், இளம் வீரர் ருதுராஜின் இப்படி அபாரமாக செயல்பட்டு வருவது இந்திய அணியின் தேர்வுக் குழுவிற்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கட்டாயம் இவரை அணியில் எடுத்தே ஆக வேண்டும் என்கின்ற நிலைக்கு தள்ளியிருக்கிறது.