காசோலை மோசடி வழக்கில் தமிழ்ப்பட துணை நடிகைக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழில் அஜித் நடித்து வெளியான ‘அசல்’ படத்தில் சிறு வேடத்தில் நடித்து இருப்பவர் துணை நடிகை கோய்னா மித்ரா. சூர்யா நடித்த ‘அயன்’ படத்தில் வரும் ‘ஹனி, ஹனி’ பாடல் மற்றும் தூள் படத்தில் வரும் ‘கொடுவா மீசை’ பாடலிலும் நடனமாடி இருப்பார். இவர் பூனம் செதி என்ற மொடல் அழகியிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
கடனை திருப்பி கொடுக்க 2013-ம் ஆண்டு நடிகை கோய்னா மித்ரா அவருக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலையை கொடுத்து உள்ளார். ஆனால் நடிகையின் வங்கிக்கணக்கில் பணமில்லாமல் காசோலை திரும்பி வந்தது.
இந்த காசோலை மோசடி குறித்து மொடல் அழகி, நடிகை கோய்னா மித்ரா மீது மும்பை நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நடிகை கோய்னா மித்ராவுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் மொடல் அழகி பூனம் செதிக்கு ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் வட்டியுடன் சேர்த்து ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்தை நடிகை கோய்னா மித்ரா கொடுக்க வேண்டும் என தீர்ப்பு கூறியது.