மட்டக்களப்பு வைத்தியசாலையில் இரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முழுமையான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாவிட்டால் குறித்த வழக்கினை குற்றப் புலனாய்வுத்துறையினரிடம் பாரப்படுத்த வேண்டிவரும் என மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எ.சி.றிஸ்வான் எச்சரித்துள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த 9 வயதுடைய ஜெயக்காந்தன் விதுலஷ்சன் என்ற சிறுவன், கடந்த ஜனவரி மாதம் 3ம் திகதி விபத்தில் காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சைகளின்போது, அவருக்கு இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக, அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சையின் பின்னர் குணமடைந்த சிறுவன் வீடு திரும்பினார். எனினும், மீண்டும் நோய்வாய்ப்பட்டுள்ளார். அதனையடுத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட சிறுவனின் சிறுநீரக பகுதியில் சிறிய கசிவு ஏறபட்டுள்ளதாகவும் எனினும் அதனால் எந்த பாதிப்பும் இல்லையென்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்பின்னர் அவரது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக பெற்றோர் வைத்தியரிடம் விசாரித்துள்ளனர். இரத்தம் மாற்றி ஏற்றியதால்தான் சிறுநீரகம் இரண்டும் பாதிப்படைந்துள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்ததாக உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் தெரிவித்திருந்தனர்.
அத்தோடு, இந்த விடயம் தொடர்பாக 18ம் திகதி தனக்கு தெரிய வந்ததாகவும் தனது மகன் 19ம் திகதி உயிரிழந்ததாகவும் தெரிவித்திருந்தனர்.
மேலும் இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதாலேயே தனது மகன் மரணித்ததாக பொலிஸாருக்கு அறிக்கை வழங்கியுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாகவும் உயிரிழந்தவரின் தந்தை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது பொலிஸார் வழங்கிய அறிக்கைகள் திருப்தியளிக்காத நிலையில் முழுமையான அறிக்கையினை எதிர்வரும் 07ம் திகதி நீதிமன்றுக்கு வழங்குமாறும், அது திருப்தியளிக்காவிட்டால் வழக்கினை குற்றப் புலனாய்வுத்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 7ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கடந்த திங்கட்கிழமை இரண்டு தாதியர்கள் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.