ஜூலை 14 அன்று கைப்பற்றப்பட்ட பனாமா கொடியிடப்பட்ட டேங்கரில் இருந்து 12 இந்திய ஊழியர்களில் 9 பேரை ஈரான் விடுவித்துள்ளது.
சர்வதேச கடல் விதிகளை மீறியதாகக் கூறி ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானிய புரட்சிகர காவல்படையினரால் கடந்த வாரம் பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் ஸ்டெனா இம்பெரோ மற்றும் பனாமா கொடியிடப்பட்ட எம்.டி ரியா கப்பல்கள் கைப்பற்றப்பட்டன.
ஈரானிய அரசாங்கத்திற்கும் பிரித்தானியா, அமெரிக்காவிற்கு இடையே பெருகிவரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைப்பற்றப்பட்ட ஸ்டெனா இம்பெரோ கப்பலில் 18 இந்தியர்கள், மூன்று ரஷ்யர்கள், ஒரு லாட்வியன் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் இருந்தனர். எம்.டி ரியா கப்பலில் 12 இந்தியர்கள் இருந்தனர்.
இந்த நிலையில் பனாமா கப்பலில் இருந்த 9 இந்தியர்களை ஈரான் விடுத்துள்ளது. ஒன்பது பேரின் விடுதலை குறித்த விவரங்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்னும் தெரிவிக்கவில்லை.
அதேசமயம் எம்.டி ரியா கப்பலில் இருந்த மற்ற மூன்று இந்தியர்களை ஆவணங்களில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக விடுவிக்கவில்லை.
அவர்களுடன் சேர்த்து ஸ்டெனா இம்பெரோ கப்பலில் கைது செய்யப்பட்ட 18 இந்தியர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் இந்திய அதிகாரிகள் நேரில் சென்று சந்தித்துள்ளனர்.